

ஆம் ஆத்மி கட்சியைப் பிளவு படுத்தி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆட்சியைக் கவிழ்க்க பாரதிய ஜனதா தலைவர்கள் இருபது கோடி ரூபாய் பேரம் பேசியதாக புகார் எழுந்துள்ளது.
கஸ்தூரிபா நகர் தொகுதியின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வான மதன்லால் இந்தக் குற்றச்சாட்டை தெரிவித்தார். இது குறித்து திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
கடந்த டிசம்பர் 7 நள்ளிரவு 12.45-க்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், கட்சியில் இருந்து ஒன்பது எம்.எல்.ஏக்களை பிரித்து கட்சியைப் பிளவுபடுத்தினால், நான் முதல்வராகலாம் எனவும் இதற்காக எனக்கு ரூ.20 கோடி மற்ற எம்.எல்.ஏக்களுக்கு தலா ரூ.2 கோடி தருவதாகவும் கூறினர்.
பேசுவது யார் என நான் கேட்டபோது பாஜக தலைவர் அருண்ஜெட்லிக்கு மிகவும் வேண்டியவன் என எதிர் முனையில் பேசியவர் கூறினார்.
ஒரு வாரம் கழித்து குஜராத்தில் இருந்து வந்த இருவர் என்னைச் சந்தித்து இதையே கூறினர். அவர்கள் அந்த மாநில முதல்வர் சொன்னதன்பேரில் சந்தித்ததாகத் தெரிவித்தனர் என்றார்.
அவருடன் இருந்த ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரான சஞ்சய்சிங் கூறியதாவது:டெல்லியின் மின்சாரம் தரும் நிறுவனங்களின் கணக்குகளை சரிபார்க்க உத்தரவிட்டதை எதிர்த்து இந்த சதியில் பாஜகவும் காங்கிரஸும் இறங்கியுள்ளன.
இதை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் நாளைமுதல் ஆம் ஆத்மி கட்சி சார்பில் ’போல் கோல்(குட்டு வெளிப்படுத்தும்)’ போராட்டம் நடைபெறும் எனக் கூறினார்.இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள பாஜக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி கூறியிருப்பதாவது:
ஆம் ஆத்மி கூறுவது அடிப்படை ஆதாரம் இல்லாதது. தவறுகளையும் பொய்களையும் அடிப்படையாக வைத்து ஆம் ஆத்மி கட்சி அரசியல் செய்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது, ஆம் ஆத்மி கட்சியை கவிழ்க்கும் முயற்சியில் பாஜக இறங்கி இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
பின்னி எச்சரிக்கை
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. வினோத்குமார் பின்னி, ஐக்கிய ஜனதாவின் ஒரே எம்.எல்.ஏ. ஷோஹிப் இக்பால், சுயேச்சை எம்.எல்.ஏ. ராம்வீர் ஷோக் ஆகியோர் டெல்லிவாசிகளின் கோரிக்கைகளை அடுத்த 48 மணி நேரத்திற்குள் நிறை வேற்றாவிட்டால் கேஜ்ரிவால் அரசை கவிழ்ப்போம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
ஆம் ஆத்மியின் இரு எம்.எல்.ஏக்கள் ஆதரவு தனக்கு உள்ளது என்றும் பின்னி தெரிவித்திருந்தார். இவர்கள் மூவரும் பாஜகவின் கூட்டணிக் கட்சியான அகாலி தளத்தின் எம்.எல்.ஏவை கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், திங்கள்கிழமை மதியம் முதல்வர் கேஜ்ரிவாலை, ஷோஹிப் இக்பால் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஷோஹிப் இக்பால், தனது கோரிக்கைகளை நிறைவேற்ற கேஜ்ரிவால் உறுதியளித்துள்ளார், எனவே எனது ஆதரவு தொடரும் என்றார்.