

நவீன தொழில் நுட்பங்களுடன் ஆந்திர மாநிலத்தின் புதிய சட்டப்பேரவை கட்டிடம் தயாராகிவிட்டது. அதன் தலைநகரான அமராவதியில் வரும் 10-ம் தேதி புதிய சட்டப்பேரவை தொடங்கப்பட உள்ளது.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிந்த பின்னர், ஹைதராபாத் ஆந்திர மாநிலத்தின் தற்காலிக தலைநகரமாக மாறியது. இதன் மீது முழு அதிகாரத்தை ஆந்திரா இழந்தது. இதன் காரணமாக உடனடியாக புதிய தலைநகரத்தை தேட வேண்டிய அவசியம் ஆந்திராவிற்கு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலத்தின் மையத்தில் விஜயவாடா-குண்டூர் இடையே அமராவதி எனும் பெயரில் புதிய தலைநகரம் உருவாகும் என ஆந்திர அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள் 33 ஆயிரம் ஏக்கர் நிலங்களை தலைநகருக்காக வழங்கினர்.
சவுண்ட் ஃப்ரூப்
அமராவதியை நாடே போற்றும் அழகிய தலைநகரமாக உருவாக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளின் உதவிகளுடன் நவீனமாக வடிவமைத்து வருகிறார். அமராவதியில் ஏற்கனவே தலைமை செயலகம் தொடங்கி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அமராவதி வெலகபுடி பகுதியில் அதிநவீன சட்டப்பேரவையும் கட்டப்பட்டு அதன் பணிகள் நூறு சதவீதம் நிறைவடைந்துள்ளது. இதில் 230 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனித்தனி நவீன மைக்குகள் வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உறுப்பினர் பேசவும், தேவைப்பட்டால் வாக்களிக்கவும் முடியும். மேலும் சுவர்கள் ‘சவுண்ட் ஃப்ரூப்’ செய்யப்பட்டுள்ளதால், சத்தம் வெளியே கேட்காது.
10-ம் தேதி தொடக்கம்
ஆந்திர மாநில சபாநாயகர் கோடல சிவப்பிரசாத் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
புதிய சட்டப்பேரவை வரும் 10-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. அன்றைய தினம் தேசிய நாடாளுமன்ற பெண்கள் மாநாடு இங்கு தொடங்குகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டில் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ஆளுநர் நரசிம்மன், முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய பெண் அமைச்சர்கள், நாடு முழுவதிலும் உள்ள பெண் எம்.பி.க்கள், நேபாளம், இலங்கை, வங்கதேசத்தை சேர்ந்த பெண் பிரமுகர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் முதற்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை கலந்து கொள்ளும் இந்த 3 நாள் மாநாட்டில், பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், பி.வி. சிந்து, சானியா மிர்சா, பெண் தொழிலதிபர்கள், நோபல் பரிசு வென்ற தலாய் லாமா, முகமது யூனஸ் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர். ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களில் இருந்து 2,500 கல்லூரி மாணவிகளும், 400 எம்.பி, எம்.எல்.ஏக்களும் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு சபாநாயகர் கோடல சிவப்பிரசாத் தெரிவித்தார்.