

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்ப வில்லை. அதே சமயம் மாநிலங்களவை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதை வெறுக்க வில்லை என மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான சரத்பவார் இது தொடர்பாக கட்சி நிகழ்ச்சியில் கூறியதாவது: மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதை நிறுத்த முடிவு செய்திருக்கிறேன். இதன் மூலம் கட்சிப் பணிகளில் கூடுதல் சிரத்தை காட்ட முடியும். அதே சமயம் மாநிலங்களவை மூலம் தேர்வு செய்யப்படுவதை வெறுக்கவில்லை. வரும் மார்ச் மாதம் மாநிலங்களவைக்குத் தேர்தல் நடைபெற உள்ளது.
சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததற்காக அக்கட்சியினரும், கூட்டணிக் கட்சியினரும் மனதைத் தளரவிடத் தேவையில்லை. மகாராஷ் டிரத்தில் உள்ள ஆளும் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி இந்தத் தேர்தல் முடிவுகளுக்காகக் கவலைப்படத் தேவையில்லை. 1977 ஆம் ஆண்டு காங்கிரஸ் தோல்வி யடைந்தது, 2 ஆண்டுகளில் கட்சியை வலுப்படுத்தி இந்திரா மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார். உறுதியாக முடிவெடுக்கும் திறனுடைய தலைவர்களை மக்கள் விரும்புகின்றனர். அத்தகையவர்களுக்கே ஆதரவளிக்
கின்றனர். மத்தியப் பிரதேசத்திலும், சத்தீஸ்கரிலும் நம்மைப் பலப்படுத்திக் கொள்வதன் மூலம் மீண்டும் ஆட்சியமைப்போம். ராஜஸ்தானிலும், டெல்லியிலும் உள்ள மாநில அரசுகளின் செயல்பாடுகளை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குறித்து பெரிதாகப் புகழ்ந்து வந்தார்கள், டெல்லி தேர்தல் முடிவுகளுக்குப் பின் அது மங்கி விட்டது.
உணவுப் பாதுகாப்புத் திட்டம் வரும் 26 ஆம் தேதி அமல்படுத்தப்படும். அது 65 சதவீத மக்களுக்குப் பயனளிப்பதாக இருக்கும் என்றார்.
சோனியா வெளிநாட்டவர் என்ற சர்ச்சையின் போது காங்கிரஸில் இருந்து 1999 ஆம் ஆண்டு வெளியேறிய சரத் பவார், மகாராஷ்டிரத்தில் காங்கிரஸுடன் 14 ஆண்டுகளாக ஆளும் கூட்டணியாகத் தொடர்கிறார். கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலும் அங்கம் வகித்து வருகிறார். -பி.டி.ஐ.