Last Updated : 26 Sep, 2016 04:28 PM

 

Published : 26 Sep 2016 04:28 PM
Last Updated : 26 Sep 2016 04:28 PM

பெங்களூரு முதியவர்களை நெகிழவைத்த தமிழ் இளைஞர்களின் அல்சைமர் விழிப்புணர்வு நாடகம்

பெங்களூருவை சேர்ந்த தமிழ் இளைஞர்கள் அல்சைமர் நோய் குறித்து விழிப்புணர்வு நாடகத்துக்கு பெங்களூரு நகர முதியவர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது.

இந்த நாடகம் கப்பன் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை அரங்கேற்றப்பட்டது. இதனை கண்டு ரசித்த நூற்றுக்கும் மேற்பட்ட முதியவர்கள் நாடக குழுவினரை ஆரத்தழுவி நெகிழ்ச்சியோடு பாராட்டினர்.

முதுமையில் ஏற்படும் மறதி நோயான அல்சைமர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த மாதம் முழுவதும் அல்சைமர் மாதமாக கடைபிடிக்கப்படுகிறது.

பெங்களூருவில் இயங்கிவரும் நைட்டிங்கேல் அமைப்பு நிறுவனம் சார்பாக அங்குள்ள கப்பன் பூங்காவில் நேற்று பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கர்நாடக சுகாதாரத்துறை செயலர் சோமேஷ்வரா, நிமான்ஸ் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சவும்யா, நைட்டிங்கேல் அமைப்பின் தலைவர் ராஜா உள்ளிட்டோரும், 300-க்கும் மேற்பட்ட முதியவர்களும் பங்கேற்றனர்.

அப்போது பெங்களூருவை சேர்ந்த ''தெஸ்பியன்'' நாடக குழுவினரின் சார்பாக, '' என்னை மறவாதே'' என்ற விழிப்புணர்வு நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இயக்குநர் ஷாலினி இயக்கிய இந்த நாடகத்தில், 10-க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் நடித்தனர்.

இதில் வயதானவர்கள் ஞாபக‌ மறதியால் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்சினைகள், தடுமாற்றங்கள், அவமானங்கள் மிக நுட்பமாக விவரிக்கப்பட்டது.

மறதியால் அவதிப்படும் வயதானவர்களின் சிக்கலை புரிந்துக்கொள்ளாமல் குடும்பத்தினரும், இளையவர்களும் நடந்துக்கொள்ளும் சம்பவங்களை தத்ரூபமாக நடித்துக்காட்டப்பட்டது. குறிப்பாக அல்சைமர் நோயால் அவதிப்படும் முதியவர்களை இளையவர்கள் அன்புடனும், அக்கறையுடனும் அணுக வேண்டும். இத்தகைய நோயால் பாதிக்கப்படுபவர்களை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்காமல், உடனடியாக உரிய மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்தியது.

இந்த விழிப்புணர்வு நாடகத்தில் நடித்த அனைத்து தமிழ் நடிகர்களும் கன்னடம் மற்றும் ஆங்கில மொழியை சிறப்பாக பேசி நடித்தனர்.

பெங்களூரு தமிழ் இளைஞர்களின் திறனையும், சமூக செயல்பாட்டையும் கண்டு வியந்த சிறப்பு விருந்தினர்கள், ''கலைக்கு சாதி, மதம், மொழி, இனம் ஆகியவை தடையில்லை. மக்களின் பிரச்சினையை பேசும் கலையை அரசியல் தாண்டி அனைவரும் ஆதரிக்க வேண்டும்'' என மனதார பாராட்டினர். இதே போல நூற்றுக்கும் மேற்பட்ட முதியவர்களும் இளைஞர்களை ஆரத்தழுவி பாராட்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையிலும், அல்சைமர் குறித்த விழிப்புணர்வு நாடகத்தை காண கப்பன் பூங்காவில் ஏராளமானோர் கூடியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x