

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3-வது முனையத்தில் உலகின் மிகப்பெரிய கை ராட்டை நிறுவப்பட்டுள்ளது. இதனை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா நேற்று திறந்து வைத்தார்.
உயர் தர பர்மா தேக்கால் உருவாக்கப்பட்ட இந்த கை ராட்டை 4 டன் எடை, 9 அடி அகலம், 17 அடி உயரம், 30 அடி நீளம் கொண்டது. 42 தச்சர் களால் 55 நாட்களில் உருவாக் கப்பட்டுள்ளது. சபர்மதி ஆசிரமத் தின் அருகிலுள்ள பரயோக் சமிதி காதி கிராம தொழிற்சாலையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கை ராட்டை, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தில் 4,5-வது நுழைவாயிலுக்கு இடையே உள்ள முன்னரங்கத்தில் நிறுவப் பட்டுள்ளது.
இந்த கை ராட்டை குறித்து காதி கிராம தொழிற்சாலை ஆணையத்தின் (கேவிஐசி) தலைவர் வி.கே.சக்ஸேனா கூறியதாவது:
முகம் தெரியா ராணுவ வீரர்களுக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளதைப் போன்று இதுவும் ஒரு நினைவுச் சின்னம்தான். தேசத்தந்தை மகாத்மா காந்தியின் அழைப்பை ஏற்று தற்சார்பு மற்றும் தொழிலாளர்களின் கண்ணியத்தை வெளிப்படுத்திய முகம்தெரியாத கிராமப்புற மக்கள் கூட்டத்திற்கான நினைவுச் சின்னமாக இது நிறுவப்பட்டுள்ளது” என்றார்.
தலைநகர் டெல்லியில் ஏராளமான வெளிநாட்டுப் பயணிகள் வருவார்கள் என்பதால் இது இங்கு நிறுவப்பட்டுள்ளது.
ஜிஎம்ஆர் குழும தலைவர் ஜிஎம் ராவ் கூறும்போது, “டெல்லி சர்வதேச விமான நிலைய நிறுவனம் தனது பணியாளர்களுக்கு கோடைகால சீருடையை காதி நிறுவனத்திடம் இருந்து பெறும்” எனத் தெரிவித்துள்ளார்.
கை ராட்டை நிறுவப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “ராட்டை நமது பெருமை மிகு பாரம்பரியத்தின் அடையாளம், மகாத்மா காந்தி தலைமையிலான விடுதலைப் போராட்ட நிகழ்வுகளை நினைவுபடுத்தும் விஷயம். இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு, இந்தியாவின் காலவரம்பற்ற மரபு, கொள்கை, நல்லிணக் கத்தை வெளிப்படுத்தும் சின்னமாக ராட்டை இருக்கும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய பாரம்பரியத்தை நினைவுறுத்தும் வகையில் டெல்லி விமான நிலையத்தில் முத்திரைகள், ராஜ ஊர்வலம், யானை சிற்பங்கள், சூரிய சிற்பம், சூரிய நமஸ்காரம், பழங் குடியின மக்களின் வார்லி ஓவியம் உள்ளிட்டவை இடம்பெற் றுள்ளன. இதன் 3-வது முனை யத்தில் எம்எஃப் ஹூசைன், ஏஞ்சலோ எலா மேனன, பரேஷ் மெய்டி, சதிஷ் குப்தா, தோட்டா தரணி உள்ளிட்டோரின் கலை வடிவங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
படம்: சங்கர் சக்ரவர்த்தி