

இந்திய அரசிடம் ராணுவ கண்காணிப்பு விமான ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக லஞ்சம் வழங்கியதாக கூறப்படும் புகார் குறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு பிரேசிலின் எம்ப்ரர் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்தியில் கடந்த 2008-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தது. அப்போது, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டிஆர்டிஓ) ரூ.1,400 கோடி மதிப்பில் நவீன ராடார்கள் பொருத்தப்பட்ட 3 கண்காணிப்பு விமானங்களை வாங்க எம்ப்ரர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
இதுபோல அமெரிக்கா உட்பட மேலும் பல நாடுகள் எம்ப்ரர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளன. இதனிடையே, 2010-ல் டோமினிக்கன் நாட்டு அரசிடமிருந்து இதுபோன்ற விமான ஒப்பந்ததைத் பெற எம்ப்ரர் நிறுவனம் லஞ்சம் வழங்கியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அமெரிக்க நீதித் துறை விசாரணை நடத்தி வருகிறது.
8 நாடுகளுடன் ஒப்பந்தம்
அப்போதிலிருந்தே, மேலும் 8 நாடுகளுடன் எம்ப்ரர் நிறுவனம் செய்துகொண்ட ஒப்பந்தங்களும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரேசில் நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது. எம்ப்ரர் நிறுவனம் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
அபராதம் செலுத்த நிதி
ஒருவேளை அபராதம் விதிக்கப்பட்டால் அதை செலுத்துவதற்கு வசதியாக, சுமார் ரூ.1,300 கோடியை எம்ப்ரர் நிறுவனம் ஒதுக்கி வைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இதனால் எம்ப்ரர் நிறுவனம் இந்தியா, சவுதி அரேபியாவுடன் ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் வசிக்கும் இந்திய இடைத் தரகருக்கு இதில் முக்கிய பங்கு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசு உத்தரவு
இதுகுறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “போர் விமான ஒப்பந்தத்தைப் பெற பிரேசிலின் எம்ப்ரர் நிறுவனம் லஞ்சம் தந்ததாக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு டிஆர்டிஓ எம்ப்ரர் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது. விளக்கம் கிடைத்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.