

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங்கை அமிர்தசரஸ் தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் நிறுத்தியிருப்பது பாஜக வேட்பாளர் அருண் ஜேட்லி போட்ட கணக்கை மாற்றி இருக்கிறது.
வேறு எந்த வேட்பாளரையாவது காங்கிரஸ் நிறுத்தி இருந்தால் அருண் ஜேட்லியின் வெற்றி எளிதாக இருந்திருக்கும் என்கிறார் கள் உள்ளூர் பாஜக தலைவர்கள்.
அமரிந்தர் சிங்கை வேட்பாளராக அறிவிப்பதற்கு முன் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமின்றி தொய்வு அடைந்து கிடந்தனர். மேலும் ஒற்றுமை குலைந்து தமக்குள் பிளவுபட்டுக் கிடந்தனர். இப்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. பாஜகவுக்கு கடுமையான போட்டியை கொடுப் பார் அமரிந்தர் சிங் என்றார் உள்ளூர் பாஜக தலைவர் ஒருவர்.
பாடியாலா மகாராஜா என அழைக்கப்படும் 72 வயது அமரிந்தர் சிங் வெள்ளிக்கிழமை பிரம்மாண்டமாக பிரசாரம் நடத்தி இதுதான் எனது பலம் என நிரூபித்திருக்கிறார்.
அருண் ஜேட்லி
பாஜக வேட்பாளரான அருண்ஜேட்லி சிறந்த பேச்சாளர் மட்டுமல்லாமல் புகழ்மிக்க வழக்கறிஞரும் ஆவார். மார்ச் 18-ம் தேதி அவரும் வாக்கு சேகரிக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இப்போது தான் மக்களவைக்கு முதல் முறையாக போட்டியிடுகிறார்.
அமரிந்தர் சிங் கடுமையான போட்டியாக விளங்குவார் என்பதில் சந்தேகம் கிடையாது. அதேவேளையில், பாஜக தொண்டர்களும் இந்த தொகுதியில் தமது கட்சி வெற்றி பெறவேண்டும் என்கிற துடிப்புடன் அயராமல் உழைக்கிறார்கள் என்கிறார் மாநில பாஜக துணைத் தலைவர் ராஜேந்தர் மோகன் சிங் சினா.
பாஜகவின் கூட்டணி கட்சியான சிரோமணி அகாலி தளத்துக்கு கிராமப் பகுதிகளில் பேராதரவு இருக்கிறது. அந்த ஆதரவு ஜேட்லிக்கு கிடைக்க முயற்சிப்போம் சிறிய கட்சிகளின் ஆதரவையும் பாஜக நாடுகிறது. எனவே காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்க வேண்டிய வாக்குகள் சிதறக்கூடிய வாய்ப்பு நிறையவே இருக்கிறது என்கின்றனர் பாஜக தலைவர்கள்.
அமிர்தசரஸ் தொகுதியில் பாஜகவை தோற்கடிப்பது என்கிற எண்ணம் மேலோங்க காங்கிரஸ் தொண்டர்கள் உழைக்கிறார்கள். பிரிந்து கிடந்த அவர்களை ஒற்றுமைப்படுத்தி உத்வேகம் ஊட்டியிருக்கிறார் அமரிந்தர் சிங். செல்வாக்கு மிக்க தலைவரான அவர் மக்களால் நேசிக்கப்படுபவர் என மாவட்ட காங்கிரஸ் (ஊரகப் பிரிவு) தலைவர் குர்ஜித் சிங் அவுஜ்லா தெரிவித்ார்.
மொத்தமுள்ள 15 லட்சம் வாக்காளர்களில் 60 சதவீத பங்கு வகிக்கும் ஜாத் சீக்கியர் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் அமரிந்தர் சிங்கின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக பாஜகவினரே ஒப்புக் கொள்கிறார்கள்