

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை 'ஏழைகளின் தலைவர்' என்று அக்கட்சி வருணித்துள்ளது.
நாகபுரியில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர், “பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்தது, எங்களுக்கு ஊக்கத்தை அளித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கோ அதிர்ச்சியை ஏற்பட்டுத்திருக்கிறது.
குஜராத்தின் வளர்ச்சி காரணமாக, மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்துவதில் சாதகம் நிலவுகிறது. நாட்டின் நடுத்தர மக்கள் மட்டுமின்றி, ஏழைகளின் விருப்பத்துக்குரியவராகவும் நரேந்திர மோடி திகழ்கிறார்.
2014 தேர்தலில் 300 இடங்களைக் கைப்பற்றுவோம். அத்வானி உள்பட கட்சியில் உள்ள அனைவருமே மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. சமீபத்தில் மோடிக்கு அத்வானி புகழாரம் சூட்டினார். எனவே, கட்சிக்கு எந்தக் குழப்பமும் இல்லை” என்றார் பிரகாஷ் ஜவடேகர்.