

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் கூடுதல் சாட்சிகளை விசாரிக்க சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளதால் ராசா, கனிமொழி, தயாளு உள்ளிட்டோருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி, தயாளு உள்ளிட்ட 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு விசாரணை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு சாட்சி யங்கள் பதிவு முடிவடைந்து விட்டது. இதனால், வழக்கின் இறுதி வாதம் நவம்பர் 10-ம் தேதி முதல் தொடங்கும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், அமலாக்கப் பிரிவு துணை இயக்குநர் ராஜேஷ்வர் சிங் உள்ளிட்ட சிலரை விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு வந்தது. அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் புதிய தகவல்கள் தெரிவிக்கப் பட்டுள்ளதால், அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சிபிஐ தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து குற்றம் சாட்டப் பட்டவர்கள் தரப்பும் பதில் அளிக்க வேண்டும் என்பதால், ராசா, கனிமொழி, தயாளு உள்ளிட்ட 17 பேருக்கும் மீண்டும் சம்மன் அனுப்ப நீதிபதி ஓ.பி.சைனி நேற்று உத்தரவிட்டார்.