

பெங்களூருஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழகத்தில் போராட்டம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து அவசர சட்டம் இயற்றப்பட்டது. இதன் எதிரொலியாக கர்நாடகாவில் கம்பளா போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி பல்வேறு இடங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மங்களூரு அருகேயுள்ள மூடுபிதரியில் உள்ள சுதந்திர பூங்காவில் நேற்று ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மூடுபிதரி எம்எல்ஏ அபயசந்திரா ஜெயின் கூறும்போது, “பாரம்பரிய விளையாட் டான கம்பளா போட்டிக்கு தடை விதித்ததை ஏற்க முடியாது. ஜல்லிக்கட்டுக்காக தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியதை போல, கர்நாடக அரசும் கம்பளா போட்டிக்காக அவசர சட்டம் இயற்ற வேண்டும்” என்றார்.
இதேபோல மங்களூரு, உடுப்பி, பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட இடங்களிலும் இளை ஞர்கள் கம்பளா போட்டி நடத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கம்பளா போட்டிக்கு அவசர சட்டம் இயற்றுவது தொடர்பாக முதல்வர் சித்தராமையா, சட்ட அமைச்சர் ஜெயசந்திரா மற்றும் சட்ட நிபுணர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது கம்பளா போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவும், அவசர சட்டம் இயற்றவும் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.