முதன்முறையாக அயோத்தியில் ராகுல் பிரச்சாரம்

முதன்முறையாக அயோத்தியில் ராகுல் பிரச்சாரம்
Updated on
1 min read

உ.பி. சட்டப்பேரவை தேர்தலுக்காக பிரச்சாரம் துவக்கியுள்ள காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, அயோத்திக்கு இன்று சென்றார். இவர், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வரும் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் தன் கூட்டங்களை நிறுத்தி வைப்பதாகவும் அறிவித்துள்ளார்.

அடுத்த வருடம் வரவிருக்கும் உ.பி. சட்டப்பேரவை தேர்தலுக்காக காங்கிரஸ் அம்மாநிலத்தில் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறது. இதற்காக ராகுல் காந்தியும், 'தியோரியா முதல் டெல்லி வரை' என விவசாயிகளுக்காக கட்டில் சபைக்கூட்டங்கள் நடத்தி வருகிறார். இதன் நான்காவது நாளில் சர்ச்சைக்குரிய இடமான பாபர் மசூதி-ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்திக்கு வந்திருந்தார் ராகுல். கடந்த டிசம்பர் 6, 1992-ல் இங்கிருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின் காந்தி குடும்பத்தில் அயோத்திக்கு முதல் நபராக ராகுல் கருதப்படுகிறார்.

சர்ச்சைக்குரிய இடத்திற்கு மிக அருகில் இருக்கும் ஹனுமன் கோயிலுக்கு சென்று அங்குள்ள ஹனுமனை வணங்கி சிறப்பு பூஜை செய்தார் ராகுல். எனினும், சர்ச்சைக்குரிய இடத்தின் தற்காலிக கூடாரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ராமர் கோயிலுக்கு அவர் செல்லவில்லை. பிறகு அந்த கோயிலை நிர்வாகித்து வரும் ஹனுமன் மடத்தின் தலைவரான மஹந்த் கியான் தாஸையும் சந்தித்துப் பேசினார்.

நாட்டில் உள்ள பல்வேறு அஹாடாக்களின் தலைமை அமைப்பான அஹாடா பரிஷத்தின் தலைவராகவும் இருந்தவர். ஆனால், ராமர் கோயில் கட்ட போராட்டம் நடத்தி வரும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பிற்கு எதிரான கொள்கைகளை உடையவர். பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர் என்ற பெயரும் கியான் தாஸுக்கு உண்டு.

முன்னதாக, இன்று காலை இரட்டை நகரமான பைஸாபாத்-அயோத்தி வந்திருந்தார் ராகுல். பைஸாபாத்தில் உள்ள மகாத்மா காந்தி, பாலகங்காதர திலகர் மற்றும் ஆச்சார்யா நரேந்திர தேவ் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்து தன் பிரச்சாரத்தை துவங்கினார். அப்போது பள்ளிகளுக்கு சென்று கொண்டிருந்த பைஸாபாத் நகர குழந்தைகள் ராகுலை கண்டு கையசைத்து மகிழ்ந்தனர். இந்த இரட்டை நகரத்தை சுற்றி வசிக்கும் ஆயிரக்கணக்கான கிராமவாசிகள் ராகுலை நேரில் காண திரண்டு வந்திருந்தனர்.

வழக்கமாக பாரதிய ஜனதா தலைவர்கள் அயோத்திக்கு ஒவ்வொரு தேர்தலிலும் வந்து தவறாமல் பிரச்சாரம் செய்வது வழக்கம். இப்போது தனது வழக்கத்திற்கு மாறாக காங்கிரஸ் சார்பில் முதன்முறையாக ராகுல் இங்கு வந்திருப்பது உ.பி. அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே, அடுத்த வாரம் வரும் இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகைக்காக தனது பிரச்சாரக் கூட்டங்களை 12 மற்றும் 13 தேதிகளில் நிறுத்தி வைப்பதாக ராகுல் அறிவித்துள்ளார். இதை இணையதளத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் 14 ஆம் தேதி தன் யாத்திரை மீண்டும் துவங்க இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in