உ.பி.யில் கட்சி மாறி வாக்களித்த பாஜக எம்எல்ஏ இடைநீக்கம்
மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த உத்தரப் பிரதேச மாநில பாஜக எம்எல்ஏ விஜய் பகதுர் யாதவை கட்சி மேலிடம் இடைநீக்கம் செய்துள்ளது.
இதுகுறித்து உ.பி. சட்டப்பேரவை பாஜக தலைவர் சுரேஷ் கண்ணா கூறும்போது, “மாநிலங்களவைத் தேர்தலில் கோரக்பூர் (ஊரகம்) தொகுதி எம்எல்ஏ விஜய் பகதுர் யாதவ் சமாஜ்வாடி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தார். இவரது இந்த செயல் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாநில தலைவருக்கு பரிந்துரை செய்தேன்” என்றார்.
இதன் அடிப்படையில் யாதவை இடைநீக்கம் செய்துள்ளதாக கட்சியின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
முன்னதாக, நேற்று முன்தினம் வாக்களித்தவுடன் யாதவ் கூறும்போது, “உ.பி.யில் முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகளின் அடிப்படையில் வாக்களித்தேன். இதற்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயார்” என்றார்.
