Published : 26 Sep 2014 10:03 AM
Last Updated : 26 Sep 2014 10:03 AM

லடாக்கில் செப்.30-க்குள் படைகளை திரும்பப்பெற சீனா ஒப்புதல்: சுஷ்மா ஸ்வராஜ்

லடாக்கில் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ராணுவ படைகளை திரும்பப்பெற சீனா ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியா மற்றும் சீனா பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்பட்டது என வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

எல்லையில் குவிக்கப்பட்ட படைகளை சீனா படிப்படியாக திரும்பப் பெறும். படைகள் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் முழுமையாக திரும்பப்பெறப்படும் என அவர் தெரிவித்தார். எல்லையில் ஊடுருவல் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படுவது மிகப்பெரிய சவாலாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அமெரிக்கா சென்றுள்ளார். ஐ.நா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றுள்ள சுஷ்மா ஸ்வராஜ் அதன் ஒரு பகுதியாக இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்: "எல்லையில் ஊடுருவல் பிரச்சினை குறித்து இந்தியா - சீனா இருநாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். படைகளை திரும்பப் பெறுவதற்கான கால அளவும் நிர்ணயிக்கப்பட்டுவிட்டன" என்றார்.

முன்னதாக ஐ.நா. சபையில் சுஷ்மா சுவராஜ், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி-யை சந்தித்துப் பேசினார். அப்போது எல்லைப் பிரச்சினை தொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினார். சீன ராணுவப் படைகளை திரும்பபெறும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கும் எனவும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் மொத்தப்படையும் திரும்பப் பெறப்படும் எனவும் முடிவு எட்டப்பட்டது. சீன வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பு மிகவும் வெற்றிகரமாக அமைந்ததாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

சீனா ஊடுருவல்:

சீன அதிபர் ஜி ஜின்பிங் சமீபத்தில் மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருந்தார். அப்போது இருதரப்புக்கும் இடையே பல்வேறு துறைகள் தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. எல்லைப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீன அதிபர் தெரிவித்திருந்தார்.

அதே சமயம் இந்திய எல்லையில் உள்ள சுமர் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவியது. அங்கு சாலை அமைப்பதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு வந்தனர். அவர்களை வெளியேறுமாறு இந்திய ராணுவம் வலியுறுத்தியும் பலனில்லை. எல்லையில் சாலை அமைக்கும் பணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ராணுவ வீரர்களை சீன அரசு நிறுத்திவைத்தது. இந்நிலையில், டெல்லியில்கடந்த 24-ம் தேதி நடைபெறவிருந்த இந்திய-சீன செய்தியாளர்கள் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது.

இத்தகைய சூழலில், அமெரிக்கா சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், லடாக்கில் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ராணுவ படைகளை திரும்பபெற சீனா ஒப்புதல் அளித்துள்ளதாக கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x