

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று நேரில் ஆஜரான தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோர் ஜாமீன் கோரி விண்ணப்பித்துள்ளனர்.
தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவன உரிமையாளர் சிவசங்கரனை நிர்பந்தப்படுத்தி, அவரது பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கச் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதற்காக, மேக்சிஸ் நிறுவனத்திலிருந்து வேறு நிறுவனங்கள் வழியாக சன் குழுமத்தில் ரூ.742.58 கோடி முதலீடு என்ற வகையில் ஆதாயம் அடைந்ததாக அமலாக்கப்பிரிவு குற்றம்சாட்டியுள்ளது.
சன் டைரக்ட் டிவி நிறுவனத்துக்கு (எஸ்டிடிபிஎல்) ரூ. 549.03 கோடி, சவுத் ஏசியா எஃப்.எப். நிறுவனத்துக்கு ரூ. 193.55 கோடி கோடி என ரூ. 742.58 கோடி சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை தயாநிதி மாறன், கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி, எஸ்ஏஎஃப்எல் நிர்வாக இயக்குநர் கே.சண்முகம் மற்றும் எஸ்ஏஎஃப் எல், எஸ்டிடிபிஎல் ஆகிய இரு நிறுவனங்கள் என 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என கடந்த பிப்ரவரி 27-ம் தேதி த்தரவிடப்பட்டிருந்தது.
இவ்வழக்கில் சிறப்பு சிபிஐ நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் தயாநிதி, கலாநிதி, காவேரி கலாநிதி, கே. சண்முகம் ஆகியோர் நேரில் ஆஜராகினர். நால்வரும் ஜாமீன் கோரி விண்ணப்பித்துள்ளனர். வழக்கு விசாரணை வரும் 21-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.