

நாடு முழுவதும் உள்ள சிறை களில் அடைக்கப்பட்டிருக்கும் விசாரணை கைதிகளின் எண் ணிக்கை அதிகரித்து வருவதால் உயர் நீதிமன்றங்கள் தானே முன் வந்து அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
குற்றத்துக்காக விதிக்கப்படும் தண்டனை காலத்தில் பாதியை முடித்த விசாரணை கைதிகள் உட னடியாக பிணையிலோ அல்லது பிணைத் தொகை இல்லாமலோ விடுவிக்கப்படலாம் என குற் றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 436 ஏ வழிவகுத்துள்ளது. ஆனால் தூக்கு தண்டனைக்கு வாய்ப்புள்ள கைதிகளுக்கு இந்த விதி பொருந்தாது.
அமைச்சர் கடிதம்
இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள 24 உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கு சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அதில் விசாரணை கைதிகள் தொடர்பான வழக்குகளை, உயர் நீதிமன்றங்கள் தானே முன் வந்து விசாரித்து அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இதன் மூலம் அடிப்படை மனித உரிமைகள் காக்கப்படும் என தெரிவித் துள்ளார்.
தேசிய குற்றவியல் பதிவு துறையின் கணக்குப்படி, பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகளில் 67 சதவீதம் பேர் மீதான குற்றங்கள் இதுவரை நிரூபிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக பிஹாரில் 82.4 சதவீத விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் 81.5 சதவீதம், ஒடிசாவில் 78.8 சதவீதம், ஜார்க்கண்டில் 77.1 சதவீதம், டெல்லியில் 76.7 சதவீத விசாரணை கைதிகள் சிறைகளில் உள்ளனர்.