

மக்களவையில் வியாழக்கிழமை தெலங்கானா மசோதாவை எதிர்த்து அமளி ஏற்பட்டபோது பெப்பர் ஸ்ப்ரேயை தெளித்து பரபரப்பை ஏற்படுத்திய எம்.பி. லகடபதி ராஜகோபால், தான் ஏன் அப்படி நடந்து கொண்டேன் என விளக்கமளித்துள்ளார்.
மேலும், தெலங்கானா மாநிலம் அமைக்கும் முடிவை அரசு கைவிடும் வரை தனது போராட்டம் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று பேட்டியளித்த அவர், "பெப்பர் ஸ்ப்ரேயை தற்காப்புக்காகவே தான் பயன்படுத்தினேன். பெப்பர் ஸ்ப்ரேயை வெற்றிடம் நோக்கியே அடித்தேன். எந்த ஒரு உறுப்பினரையும் குறிவைத்து அடிக்கவில்லை.
இருப்பினும், என் நடவடிக்கையால் பிற உறுப்பினர்களும், பத்திரிகையாளர்களும் பாதிக்கப்பட்டதற்கு வருத்தப்படுகிறேன். அதே வேளையில் என்ன நடந்தாலும், எனது போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை" என்றார் அவர்.