மகனை கொன்றவர்களை மன்னித்தார் தந்தை: குற்றவாளிகளை விடுவித்தது நீதிமன்றம்

மகனை கொன்றவர்களை மன்னித்தார் தந்தை: குற்றவாளிகளை விடுவித்தது நீதிமன்றம்
Updated on
2 min read

மகனைக் கொலை செய்தவர்களுக்கு தந்தை மன்னிப்பு வழங்கியதால், குற்றவாளிகளுக்கு விடுதலை அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் ‘கிராமின் சேவா’ என்ற அமைப்பில் ஓட்டுனர்களாக ராகுல், சஞ்சீவ், தீபக், ராஜா ஆகியோர் பணியாற்றி வந்தனர். கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி அதே நிறுவனத்தின் காரை ஓட்டி வந்த சன்னி அதை முறையாக நிறுத்தவில்லை. இதனால் ராகுல் உள்ளிட்ட 4 பேருக்கும் சன்னிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் கைகலப்பு ஏற்பட்டது. இதில் சன்னியை பெரிய கல்லால் சஞ்சீவ் தாக்கினார். இதில் சன்னியின் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியாக சன்னியின் சகோதரர் இருந்தார். அவர் சன்னியை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். அங்கு படுக்கை காலியாக இல்லாததால் அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மூன்று நாள் கழித்து சன்னி உயிரிழந்தார்.

குற்றம் நிரூபணம்

இந்த வழக்கு கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. குற்றவாளிகள் நான்கு பேரையும் சன்னியின் சகோதரர் அடையாளம் காட்டினார். உயிரிழந்தவரின் சகோதரர் என்பதால் அவரது சாட்சியத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று குற்றவாளிகள் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், சம்பவத்தை நேரில் பார்த்ததாக பொதுமக்கள் யாரும் சாட்சி சொல்லவில்லை. எனவே, வழக்கை தள்ளு படி செய்ய வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

என்றாலும் அதை ஏற்க மறுத்த கூடுதல் குற்றவியல் நீதிபதி ராஜ்குமார் திரிபாதி, சம்பவத்தை நேரில் பார்த்ததாக சன்னியின் சகோதரரைத் தவிர வேறு யாரும் சாட்சி சொல்லாவிட்டாலும், இந்த வழக்கில் நான்கு பேரும் குற்றவாளிகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொலை செய்யும் நோக்கம் இல்லாவிட்டாலும், தங்கள் செயல் மரணத்தை விளைவிக்கும் என்று தெரிந்தே செய்திருப்பதால், அவர்கள் குற்றவாளிகள் தான் என்று தீர்ப்பளித்தார். இக்குற்றத்துக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், கொலை செய்யப்பட்ட சன்னியின் தந்தையிடம் குற்றவாளிகள் மன் னிப்பு கோரியதால் அவர்களை மன்னிப்பதாக தந்தை தெரிவித்தார். “குற்றவாளிகள் நான்கு பேரும் என் மகன்களைப் போன்றவர்கள் தான். அவர்கள் சமூகத்தில் திருந்தி வாழ வாய்ப்புள் ளது. எனவே, அவர்களை மன்னிக்க விரும்பு கிறேன்” என்று அவர் தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் குற்றவாளிகள் நான்கு பேரையும் நிபந்தனையின் பேரில் விடுதலை செய்வதாக உத்தரவிட்டுள்ளது.

“குறிப்பிட்ட காலம் அவர்கள் போலீஸ் கண்காணிப்பில் இருக்க வேண்டும். அந்த காலகட்டத்தில் அவர்கள் எந்த குற்றச் செயலில் ஈடுபட்டால் அதை நீதிமன்றத்திடம் போலீஸார் தெரிவிக்க வேண்டும்” என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கொலை செய்யப்பட்டவரின் தந்தைக்கு தலா ரூ.1.5 லட்சம் வீதம் ரூ.6 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும். கண்காணிப்பு கால உத்தரவாதமாக தலா ரூ.25,000 பிணைப் பத்திரம் அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட ஒருவரின் தந்தை அளித்த மன்னிப்பால் குற்றவாளிகள் நான்கு பேர் விடுதலை பெற்றுள்ளது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in