

பாலியல் பலாத்காரம் குறித்து தான் தெரிவித்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகக் கூறிய சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா வருத்தம் தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெற்ற சிபிஐ மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா, பாலியல் பலாத்காரத்தை தடுக்க முடியாவிட்டால் அதனை நீங்கள் அனுபவியுங்கள் என தெரிவித்திருந்தார்.
சூதாட்டப் புகார்கள் பற்றி பேசிய போது, சூதாட்டத்தை தடுக்க முடியாவிட்டால் அதனை சட்டப்பூர்வமாக்கி விடலாம். இதன் மூலம் சூதாட்டத்தை கண்காணிக்கவும் முடியும், மேலும் நாட்டிற்கு வருமானமும் ஈட்ட முடியும். இதை எப்படி எடுத்துக் கொள்வது என்றால், பாலியல் பலாத்காரத்தை தடுக்க முடியாவிட்டால் அதனை அனுபவிக்க தானே செய்யவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
சிபிஐ தலைவர் ரஞ்சித் சின்கா, சூதாட்டத்தை பாலியல் பலாத்காரத்துடன் தொடர்பு படுத்தி பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு பிருந்தா காரத், கிரண் பேடி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிருந்தா காரத் கூறுகையில், ரஞ்சித் சின்கா பதவி விலக வேண்டும் எனவும், கிரண்பேடி பேசுகையில், நாகரீகமின்றி தவறான வார்த்தைகளை பயன்படுத்திய சிபிஐ தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் தேசிய மகளிர் அமைப்பு கழகம் சார்பில் சின்காவிற்கு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது.
வருத்தம்:
இந்நிலையில் இது குறித்து, விளக்கமளித்துள்ள ரஞ்சித் சின்ஹா ஒரு பழமொழி போலவே அந்த கருத்தை நான் தெரிவித்திருந்தேன் ஆனால் அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என தெரிவித்துள்ளார்.
என் கருத்தில் எந்த வித உள்நோக்கமும் இல்லை, இருப்பினும் அது யாரேனையும் பாதித்திருந்தால் அதற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்கள் மீது உயர் மதிப்பும் மரியாதையும் உடையவன் நான். இவ்வாறு சின்ஹா தெரிவித்துள்ளார்.