

‘‘இங்கிலாந்தில் உள்ள கோகினூர் வைரத்தை இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வருவதற்கான வழிமுறைகளை அரசு ஆராயும்’’ என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
இந்தியாவுக்குச் சொந்தமான கோகினூர் வைரம் 104 கேரட் கொண்டது. விலைமதிப்பற்ற மிகப்பெரிய அந்த வைரம் தற்போது இங்கிலாந்து ராணியின் கிரீடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த வைரத்தை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கேற்ப உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் கூறும்போது, ‘‘இந்தியா - இங்கிலாந்து இரு தரப்புக்கும் திருப்தி அளிக்கும் வகையில், கோகினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவுக்கே கொண்டு வருவதற்கான வழிமுறைகளை மத்திய அரசு ஆராயும்’’ என்றார்.
முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கோகினூர் வைரத்தை மீட்பது சாத்தியமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் சொலிசிட்டர் ஜெனரல் கூறியிருந்தார். அதற்கு முரணாக, வழிமுறைகளை ஆராய்வோம் என்று நேற்று அவர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
‘‘ஆந்திராவின் குண்டூர் மாவட் டத்தில் கிருஷ்ணா நதிக்கரையோர சுரங்கத்தில் கோகினூர் வைரம் வெட்டியெடுக்கப்பட்டது. பல ஆண்டுகள் பலருடைய கைகளுக்கு மாறி கடந்த 1813-ம் ஆண்டு பஞ்சாப் மகாராஜா ரஞ்சித் சிங் கைக்குச் சென்றது. தற்போது இங்கிலாந்தில் உள்ள கோகினூர் வைரம் இந்தியாவுக்கு சொந்தமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அவ்வப் போது கோகினூர் வைரத்தை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.
எனவே, இந்திய மக்களின் உணர்வு களுக்கு மதிப்பளிக்கும் வகை யில், கோகினூர் வைரத்தை மீட் பதற்கான எல்லா வழிமுறை களையும் அரசு ஆராயும் என்று உச்ச நீதிமன்றத்தில் நேற்று அளித்த பதிலில் மத்திய அரசு கூறியுள்ளது.