ஒரே வெட்டுடன் வெளியாகிறது ‘உட்தா பஞ்சாப்’: தணிக்கை வாரியத்துக்கு நீதிமன்றம் அறிவுரை
பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பொருட்களுக்கு இளைஞர்கள் எப்படி அடிமையாகிறார்கள் என்பதை கருவாகக் கொண்டு ‘உட்தா பஞ்சாப்’ என்ற படத்தை அபிஷேக் சவுபே இயக்கியுள்ளார். இதில், ஷாகித் கபூர், கரீனா கபூர், அலியா பட், தில்ஜித் தோசஞ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படத்தை தணிக்கை செய்த மத்திய திரைப்பட தணிக்கை வாரிய (சிபிஎஃப்சி) குழுவினர், ஆபாச மாகவும், வன்முறையைத் தூண்டுவ தாகவும் இருப்பதாகக் கூறி, 89 இடங் களில் கத்தரி போட பரிந்துரைத்தனர். மேலும், படத்தின் தலைப்பில் இருந்து பஞ்சாப் என்ற பெயரையும் நீக்குமாறு உத்தரவிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து படத் தயாரிப்பு நிறுவனமான பான்தம் பிலிம்ஸ் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.சி. தர்மாதிகாரி, ஷாலினி பன்சால்கர் ஜோஷி ஆகியோரடங்கிய அமர்வு, ஒரே ஒரு வெட்டு மற்றும் திருத்தி அமைக்கப்பட்ட பொறுப்புத் துறப்பு வாசகங்களுடன் படத்தை வெளியிட படக்குழுவினருக்கு அனுமதி அளித் துள்ளது. ஷாகித் கபூர் கூட்டத் தினர் மத்தியில் சிறுநீர் கழிக்கும் காட்சியை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பாகிஸ் தான் தொடர்பான வாசகங்களை நீக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள் ளனர். மேலும் ஜூன் 6-ம் தேதி தணிக்கை வாரியம் 13 வெட்டுகளைப் பரிந்துரைத்த உத்தரவுக்கும் நீதிபதிகள் தடை விதித்தனர். வரும் 17-ம் தேதிக்குள் படத்தை வெளியிடுவதற்கு வசதியாக 48 மணி நேரத்துக்குள் சான்றிதழ் அளிக்கும்படியும் தணிக்கை வாரியத்துக்கு நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய ஏதுவாக, உத்தரவை தற்காலிகமாக நிறுத்திவைக்கும்படி தணிக்கை வாரியம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், நீதிமன்றம் மறுத்து விட்டது.
நீதிமன்றம் தனது உத்தரவில், “தணிக்கை வாரியம் பாட்டி மாதிரி செயல்படக் கூடாது. காலத்துக்கு ஏற்ப மாற வேண்டும். கலையை மிக அதிக உணர்வுப்பூர்வமாக அணுகக் கூடாது. படைப்பாளிகளுக்குத் தடை போடக் கூடாது. சான்றிதழை நிறுத்தி வைப்பதும், கத்தரி போட பரிந்துரைப் பதும், படைப்பாக்கத்துக்கு எதிரானது. பஞ்சாப் வீரர்கள், தியாகிகளின் பூமி. கஞ்சார் (காட்டில் தலைமறைவாக திரிபவர்) என்ற ஒரு வார்த்தையை மக்கள் மிக உணர்வுப்பூர்வமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
திரைப்படங்களில் பார்ப்பதால் மட்டுமே மேசாமான வார்த்தையைப் பயன்படுத்தும்படி இளைஞர்கள் தூண்டப்பட மாட்டார்கள். உட்தா பஞ்சாப் திரைப்படம், நிதர்சன வாழ்வோடு தொடர்பில்லாத புனைவு கதாபாத்திரங்களால் ஆனது.
கத்தரி போடும்படி பரிந்துரை செய்வதற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு (சிபிஎஃப்சி) சட்டப்படியான அதிகாரம் உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், தனது அதிகாரத்தை தணிக்கை வாரியம் தன்னிஷ்டத்துக்குப் பயன்படுத்தக்கூடாது என்பதை மனதில் கொள்ள வேண்டும். திரைக்கதையை ஆய்வு செய்யும்போது அப்படைப்பை முழுமையாக பார்க்க வேண்டும். பாடல்கள், வசனங்களில் இருந்து ஆங் காங்கே பரவலாக சில வார்த்தைகளைத் தேர்வு செய்து அவற்றுக்கு ஆட்சேபம் தெரிவித்து நீக்கக் கூடாது.
கத்தரி போடுவதற்கு தணிக்கை வாரியத்துக்கு அதிகாரம் இருந்தாலும், சான்றிதழ் அளிப்பதுதான் தனது பணி, சென்சார் செய்வது அல்ல என்பதை கண்டிப்பாக மனதில் கொள்ள வேண்டும். திரைப்படச் (சினிமோட்டோ கிராப்) சட்டத்தில் சென்சார் என்ற வார்த்தை சேர்க்கப்படவில்லை. எனவே, தணிக்கை வாரியம் திரைப் படங்களை சென்சார் செய்வதற்கு சட்டப்படி அதிகாரம் பெற்றதல்ல. சென்சார் என்பதன் நடைமுறைப் பொருள், திரைப்படத்துக்கு சான்றளிப் பதே. படத்தில் மாற்றம் செய்யவும், வெட்டுதல் அல்லது நீக்குதலுக்கான அதிகாரத்தை தணிக்கை வாரியம் சட்டப்படி பெற்றிருக்குமாயின், இந்த அதிகாரத்தை அரசியலமைப்பு நெறி முறைகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி தொடர்ந்து இணக்கமாக மேற்கொள்ள வேண்டும்.
உட்தா பஞ்சாப் திரைக்கதையை நாங்கள் முழுமையாக பார்த்தோம். அதில், எங்குமே இந்தியா அல்லது மாநிலத்தின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு குறித்து கேள்வியெழுப்பவோ, ஆலோசனை கூறவோ இல்லை. இவ்வாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று முன்தினம் தணிக்கை வாரிய உறுப்பினர்கள் 9 பேரும் பார்த்தனர். முடிவில் ஒருமனதாக ‘உட்தா பஞ்சாப்’ படத்துக்கு ‘ஏ' சான்றிதழ் வழங்கினர். படத்தில் 89 இடங்களுக்குப் பதிலாக 13 இடங்களில் மட்டும் கத்தரி போடப்பட்டுள்ளது. இத்தகவலை தணிக்கை வாரியத் தலைவர் பஹ்லஜ் நிஹாலனி உறுதிப்படுத்தி இருந்தார்.
முன்னதாக, அபிஷேக் சவுபே இயக்கத்தில் ஷாகித் கபூர் கதாநாயகனாக நடித்த 'உட்தா பஞ்சாப்' திரைப்படத்துக்கு 13 இடங்களில் 'வெட்டு'டன் தணிக்கை வாரியம் 'ஏ' சான்றிதழ் வழங்கியது. | விவரம் >> 'ஏ' சான்றிதழ் பெற்றது 'உட்தா பஞ்சாப்'- தணிக்கை குழு 'வெட்டு' 89-ல் இருந்து 13 ஆக குறைப்பு
