

நளினி தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 4 வாரம் கூடுதல் அவகாசம் அளித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், இந்த வழக்கை சிபிஐ விசாரித்ததால், விடுதலை செய்யும் முன்பு மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்று வாதிடப்பட்டது. இதுதொடர்பாக, நளினி தனது மனுவில், “ஆயுள் கைதிகளை விடுவிக்க மத்திய அரசிடம் முன் அனுமதி பெறத் தேவையில்லை. இதற்கு முன்மாதிரியாக தீர்ப்புகள் உள்ளன” என்று குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் குரியன் ஜோசப், ரோஹின்டன் நரிமன் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய உள்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “நளினியின் மனு மீது பதிலளிக்க கூடுதல் அவகாசம் தேவை” என்று கோரினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மத்திய அரசுக்கு மேலும் 4 வாரம் அவகாசம் அளித்து உத்தரவிட்டனர்.