Last Updated : 14 Sep, 2014 09:30 AM

 

Published : 14 Sep 2014 09:30 AM
Last Updated : 14 Sep 2014 09:30 AM

காலத்துக்கு உதவாத 72 சட்டங்களை வாபஸ் பெற சட்ட ஆணையம் பரிந்துரை

காலத்துக்கு உதவாத 72 சட்டங்களை வாபஸ் பெறும்படி மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் பரிந்துரை அளித்துள்ளது.

நீதிபதி ஏ.பி.ஷா தலைமை யிலான சட்ட ஆணையம், காலத் துக்கு உதவாத சட்டங்களை பரிசீலித்து ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. அதன்படி, சட்ட ஆணையம் மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்கு அளித்துள்ள இடைக்கால அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாட்டின் 1,086 மத்திய சட்டங் களை பரிசீலனை செய்ததில் பல சட்டங்கள் காலத்திற்கு ஒவ்வாத வகையில் அமைந்திருப்பது தெரிய வருகிறது. ஏற்கெனவே ரத்து செய்யப்பட்ட 34 சட்டங்கள் இன்னும் மத்திய அரசின் இணையதளங்களில் இடம்பெற்றுள்ளன. இவற்றை உடனே நீக்க வேண்டும். மேலும், 253 சட்டங்கள் ஏற்கெனவே ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், இன்னும் சட்டப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. மேலும், 72 சட்டங்கள் வாபஸ் பெறத் தகுதியானவை என சட்ட ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

வாபஸ் பெறத் தகுதியான சட்டங்களின் பட்டியலையும் ஆணையம் அளித்துள்ளது. இதில், ‘மெட்ராஸ் அன்கவனன்டல் ஆபீஸர்ஸ் ஆக்ட் 1857’ என்ற சட்டமும் அடங்கும். சுதந்திரத்துக்கு முன்பு, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச்செயலகத்தில் அதிகாரி களுக்கு வருவாய் மற்றும் நீதித் துறை பணிகளில் முக்கியத்துவம் அளிக்க இச்சட்டம் வழிவகுக்கிறது. தற்போது அதிகாரிகள் இப்படி பிரிக்கப்படுவதில்லை. அரசுப் பணியாளர் ஆணையம், 1886 சட்டப்படி அதிகாரிகள் தரம் பிரிப்பது மாற்றப்பட்டு விட்டதால் இச்சட்டம் வாபஸ் பெறப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், நிதி ஒதுக்கீடு தொடர்பான பல சட்டங்கள் காலம் கடந்தவையாக உள்ளன. இதை மாற்ற பிரிட்டனில் இருப்பதைப் போல், ஆண்டுக்கு ஒருமுறை பொருத்தமற்ற சட்டங்களை வாபஸ் பெறும் நடைமுறையை உள்ளடக்கிய சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சட்ட ஆணையம் பரிந்துரை வழங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x