ரூ.9,000 கோடி கடனை செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிய விஜய் மல்லையா விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் அமளி
பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாத பிரபல தொழிலதிபர் விஜய்மல்லையா லண்டனுக்கு தப்பிச் சென்ற விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் நேற்று அமளி நிலவியது.
பொதுத்துறை வங்கிகள் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தது. அதில், 17 வங்கிகளிடம் வாங்கிய ரூ.9,000 கோடி கடனை திருப்பி செலுத்தாத விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்கி அவரை கைது செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை யின்போது, அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பை மல்லையா நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து, 2 வாரத்துக்குள் பதில் அளிக்க மல்லையாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தர விட்டது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நேற்று பிரச்சினை எழுப்பின. மக்களவையில் இந்த விவகாரத்தை எழுப்பிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது, “வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாத மல்லையா மீது நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டேட் பாங்க் சட்ட அதிகாரி கோரிக்கை வைத்திருந்தபோதிலும் அவரது பாஸ்போர்ட்டை அரசு முடக்கவில்லை. மாறாக அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல அனுமதித்துள்ளது” என்றார்.
இதற்குப் பதில் அளித்த நாடாளு மன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி, “மல்லையாவுக்கு தேசிய ஜன நாயக்க கூட்டணி ஆட்சியின்போது ஒரு ரூபாய் கூட கடன் கொடுக்க வில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் கடன் கொடுத்தது” என்றார். இந்த பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மாநிலங்களவையில்…
மாநிலங்களவையில் எதிர்க் கட்சித்தலைவர் குலாம் நபி ஆசாத் இந்தப் பிரச்சினையை எழுப்பி பேசும்போது, “அரசின் ஆதரவு இல்லாமல் அவர் தப்பி இருக்க முடியாது. வாராக் கடன் விவகாரத் தில் பல்வேறு அமைப்புகள் அவரிடம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் அவரை கைது செய்யாதது ஏன், அவரது பாஸ்போர்ட்டை முடக்காதது ஏன்” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளிக்கும் வகை யில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசும்போது, “மல்லையா, அவரது நிறுவனங்களுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சி யில் இருந்தபோதுதான் கடன் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
பின்னர் நாடாளுமன்றத்துக்கு வெளியே அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம் கூறும்போது, “நீதிமன்ற உத்தரவின் அடிப்படை யில் மட்டுமே ஒருவருடைய பாஸ் போர்ட்டை முடக்க முடியும். இல்லாவிட்டால் ஒருவர் வெளிநாடு செல்வதை யாராலும் தடுக்க முடி யாது.
போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கில் தொடர்புடைய இத்தாலி தொழிலதிபர் குவாத்ரோச்சியின் பாஸ்போர்ட்டை முடக்குமாறு சிபிஐ அதிகாரி அரசுக்கு கடிதம் எழுதி யிருந்தார். ஆனால், அப்போதைய காங்கிரஸ் அரசு வேண்டுமென்றே குவாத்ரோச்சியை தப்பிச் செல்ல அனுமதித்தது. ஆனால் சட்ட நடை முறை தொடங்குவதற்கு முன்பே மல்லையா வெளிநாடு தப்பி விட்டார்” என்றார்.
எப்படி தப்பினார்: ராகுல் காந்தி கேள்வி
நாடாளுமன்றத்துக்கு வெளியே காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசும்போது, “வயிற்று பிழைப்புக்காக ஏழைகள் திருடினால்கூட அவர்களை அடித்து உதைத்து சிறையில் அடைக்கின்றனர். ஆனால், ரூ.9000 கோடி கடனை திருப்பிச் செலுத்தாத தொழிலதிபரை வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல இந்த அரசு எப்படி அனுமதித்தது? இந்தக் கேள்விக்கு பிரதமரோ நிதியமைச்சரோ பதில் அளிக்கவில்லை” என்றார்.
