

எல்லை காக்கும் வீரர்களுக்கு மோசமான உணவு பரிமாறப் படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என எல்லை பாதுகாப்புப் படை விளக்கம் அளித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்புப் படையில் (பிஎஸ்எப்) எல்லை காக்கும் பணியில் ஈடுபட்டு வருபவர் தேஜ் பகதூர் யாதவ். இவர் அண்மையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ காட்சி ஒன்றை பதிவிட்டார். அதில் வீரர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுவதில்லை என்றும், ராணுவ உயரதிகாரி கள் வீரர்களுக்கான உணவில் முறைகேடுகள் செய்து வருவ தாகவும் குற்றம்சாட்டியிருந்தார். உணவு சரியில்லாத காரணத்தினால் இரவு நேரங்களில் பட்டினியுடன் படுக்கைக்கு செல்ல நேரிடுகிறது என்றும் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு, வீரர் களுக்கு தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தும்படி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார். இந்நிலையில் அந்த வீரரின் குற்றச்சாட்டுகளை பிஎஸ்எப் நேற்று மறுத்துள்ளது.
இது குறித்து பிஎஸ்எப் ஐஜி டி.கே.உபாத்யாயா கூறியதாவது:
ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் இருந்து அந்த வீரர் வெளியிட்ட வீடியோ காட்சிகள் தொடர்பாக விசாரணை நடத்தி னோம். இதற்காக டிஐஜி நிலை யில் உள்ள அதிகாரிகள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் நடத்திய விசாரணையில் வீரர்கள் அனைவருக்கும் தரமான உணவே வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிற வீரர்கள் யாரும் எந்தப் புகாரும் அளிக்க வில்லை. தேஜ் பகதூர் மட்டுமே இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார். வீரர்களுக்கு உணவு தயாரிக்கும் சமையல்காரரிடமும் விசாரணை நடத்தியுள்ளோம்.
சிறையில் தள்ளப்பட்டவர்
குற்றச்சாட்டு எழுப்பிய தேஜ் பகதூர் மேலதிகாரிகளை மதிக்காதவர். உயரதிகாரியை துப்பாக்கியால் மிரட்டியது தொடர்பாக கடந்த 2010-ல் அவர் மீது ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குடும்ப பின்னணியை கருத்தில் கொண்டு அப்போது அவரை பணியில் இருந்து நீக்கவில்லை. வெறும் 89 நாட்கள் மட்டுமே அவர் கடுங்காவலில் வைக்கப்பட்டார். பின்னர் ராணுவ தலைமையகத்தில் பணியமர்த் தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப் பட்டார்.
வரும் ஜனவரி 31-ம் தேதியில் இருந்து விருப்ப ஓய்வு பெறப் போவதாக கடிதம் அளித்துள்ளார். அந்த கடிதமும் ஏற்றுக் கொள்ளப் பட்டது. எல்லையில் இருந்த சில வீரர்கள் 15 நாட்களுக்கு முன் விடுமுறையில் சென்றனர். இதனால் ஏற்பட்ட பற்றாக்குறையை ஈடுகட்டவே தேஜ் பகதூர் கடந்த டிசம்பர் 28-ம் தேதி எல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இவ் வாறு அவர் கூறினார்.