

பாஜக மாநிலத் தலைவர் பதவிகளில் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர்களை அமர்த்த பாஜக தலைமை திட்ட மிட்டு வருகிறது.
பிரதான தேசிய கட்சிகளில், மாநிலத் தலைவர் பதவியில் அமர்த் தப்படுபவர் தங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண் டும் என அங்குள்ள கோஷ்டிகள் விரும்புவது உண்டு. இதனால் கட்சித் தலைமைக்கு எந்த சமூகத்த வரை தலைவராக நியமிப்பது என் பதில் குழப்பம் ஏற்பட்டு விடுகிறது. இதன் காரணமாக பலநேரங்களில் உருவாகும் காழ்ப்புணர்ச்சி அரசி யல், தொடர்ந்து அம்மாநிலத்தின் பொதுத் தேர்தல்களில் எதிரொலிப் பது வழக்கமாகி விட்டது. இந்த பிரச்சினையை சமாளிக்க பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு ஒரு புதிய யோசனை கிடைத் துள்ளது. இதன்படி தங்கள் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பில் முழுநேர பிரச்சாரகராக இருந்தவர்களையே இனி மாநிலத் தலைவராக நியமிப்பது என அவர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் அவர் மேற்கொண்ட இரு நியமனங்கள் இதற்கு உதாரணமாகக் காட்டப் படுகிறது.
சில மாதங்களில் தேர்தலை சந்திக்கும் மேற்கு வங்கத்தில் பாஜக தலைவராக திலீப் கோஷ் என்பவர் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். இவர் முழுநேர ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக இருந்தவர் ஆவார். இதுபோல் 2017-ல் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் உத்தராகண்ட் மாநில பாஜக தலைவராக அஜய் பட் என்பவர் கடந்த வாரம் நியமிக் கப்பட்டார். இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பில் முழுநேரத் தொண்ட ராக இருந்தவர்.
இது குறித்து ‘தி இந்து’விடம் பாஜகவின் தேசிய நிர்வாகி ஒருவர் கூறும்போது, “பிஹார் சட்டப் பேரவை தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த தோல்வி ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அங்கு மாநிலத் தலைவராக மங்கள் பாண்டே நியமிக்கப்பட்டபோது கட்சிக்குள் தொடங்கிய மோதல் தேர்தல் வரை நீடித்தது. ஆர்எஸ்எஸ் முழுநேரப் பிரச்சாரகராக இருந்த நரேந்திர மோடி, நாட்டின் பிரதமர் ஆகும்போது, இவர்கள் ஏன் மாநிலத் தலைவர்கள் ஆக முடியாது? இவர்கள் போன்ற பிரச்சாரகர்களின் தீவிரப் பிரச்சாரத்தால் தான் மக்களவை தேர்தலில் பாஜக ஆட்சியை பிடிக்க முடிந்தது. இனி இதே முறையை சட்டப்பேரவை தேர்தல்களிலும் கையாள வேண்டி பிரச்சாரகர்கள் மாநிலத் தலைவர் களாக நியமிக்கப்பட உள்ளனர்” என்றார்.
பிஹார் மாநில பாஜக தலைவ ரான மங்கள் பாண்டேவின் பதவிக் காலம் ஜனவரி 15-ம் தேதி முடி வடைகிறது. இதன் புதிய தலைவ ராக ஆர்எஸ்எஸ் பிரச்சாரகரை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கேரளாவிலும் காலியாகவி ருக்கும் மாநிலத் தலைவர் பதவிக்கு ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர் ஒருவரையே நியமிக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது. இம் மாநிலத்திலும் ஒருசில மாதங்களில் தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளது. எனவே பாஜகவில் அடுத் தடுத்து காலியாக உள்ள மாநிலத் தலைவர் பதவிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பினரே அமர்த்தப்படுவார் கள் என எதிர்பார்க்கப்படுகிறது.