Published : 26 Mar 2014 08:35 PM
Last Updated : 26 Mar 2014 08:35 PM

இலங்கை போர்க் குற்றங்கள் மீது விசாரணை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உறுதி

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இலங்கை போர்க் குற்றங்கள் மீது முழுமையான விசாரணை நடத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அக்கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

ஜெனீவா ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்ற நிலையில், காங்கிரஸின் இந்த வாக்குறுதி முக்கியத்துவம் பெறுகிறது.

காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டனர்.

அதில், "விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை ராணுவம் புரிந்த போர்க் குற்றங்கள் மீது மற்ற நாடுகளுடன் இணைந்து நேர்மையான, முழுமையான, விரைவான விசாரணை நடத்துவது உறுதி செய்யப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், "இலங்கை அரசுடன் இணைந்து தமிழ் பேசும் மக்களுக்கும், மற்ற சிறுபான்மையினருக்கும் சட்டரீதியாக சம உரிமை வழங்குவது உறுதி செய்யப்படும். தமிழர்கள் அதிகம் இருக்கும் வடக்கு மாகாணத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டு தன்னிச்சையான மாகாணங்களாக உருவாக முயற்சிகள் எடுக்கப்படும். இலங்கைத் தமிழர்கள் மற்றும் இதர சிறுபான்மையினர் தங்களது வாழ்வை முறையாக மறுசீரமைத்துக் கொள்ளத் தேவையான உதவிகளை காங்கிரஸ் கட்சி செய்யும்' என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசியல் கட்சிகளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாக, கடந்த இரண்டு வருடங்களாக ஐ.நா-வில் இலங்கைக்கு எதிராகவே மத்தியில் ஆளும் காங்கிரஸ் அணி வாக்களித்து வருகிறது.

இந்தத் தேர்தல் அறிக்கையும், தொடர்ந்து ராஜபக்சேவுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் தமிழக அரசியல் கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.

வலுவான, ஆரோக்கியமான வெளியுறவுக் கொள்கைகளை அமல்படுத்தவதோடு, அண்டை நாடுகளுடன் நிலையான, அமைதியான, பரஸ்பரமான உறவை மேம்படுத்தவும் காங்கிரஸ் கட்சி உறுதி கொண்டுள்ளதாக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திமுக சென்ற வருடம் மார்ச் மாதம் வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x