

ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திடமிருந்து நிதி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த ஆறு பேரை தேடி வருவதாக தேசிய புலனாய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆறு நபர்களும் சிரியா மற்றும் இராக்குக்குச் செல்ல பலருக்கு நிதி அளித்ததாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேசிய புலனாய்வு மையம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. மேலும் தமிழ் நாட்டிலுள்ள ஏழு சந்தேக நபர்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளது.
அவர்களின் விவரம், ஹஜா ஃபருக்தீன் (கடலூர்), காஜா மொய்தீன் (கடலூர்) , ஷாகுல் ஹமித் (சென்னை), அன்சர் மீரன் (சென்னை), மசூத் அசாருதீன் (திருநெல்வேலி), சாதிக் பாஷா ( நாகப்பட்டிணம்), முகமத் சையத் அபு தஹிர் , முகமத் தம்பிரஸ் (சென்னை).
மேலும் இவர்களுடன் தெலுங்கானவைச் சேர்ந்த நவ்மான் ஜாலீல் என்பவரும் சந்தேக பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மூத்த புலனாய்வு அதிகாரி கூறும்போது, "இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டவரும், ஐஎஸ் இயக்குத்துக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் செயல்பட்ட அதான் ஹசன் தமூதியை விசாரணை செய்தபோது இவர்களின் தொடர்பு தெரிய வந்தது" என்றார்.
தேசிய புலனாய்வு மையத்தால் பதிவுச் செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில்,"இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் செயல்பட்ட 9 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
முதல் தகவல் அறிக்கை பதிவுச் செய்யப்பட்ட 9 பேரில் 8 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் தெலுங்கானா மா நிலத்தைச் சேர்ந்தவர். அவர்களின் மீது தடை செய்யப்பட்ட அமைப்பிடமிருந்து நிதி பெறுதல், முகாம்களுக்கு ஏற்பாடு செய்தல், ஐஎஸ் இயக்கத்தில் ஆட்களை சேர்த்தல் போன்ற பிரிவுகளின் கீழ் அவர்களின் மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.