

எலெக்ட்ரானிக் ஊடகங்களை போல செய்தித் தாள்களுக்கும் தேர்தல் விளம்பரங்களை வெளியிட வாக்குப் பதிவுக்கு 48 மணி நேரம் முன் தடை விதிக்க வேண்டும், இதற்கு ஏற்றாற்போல் தேர்தல் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
வாக்குப் பதிவுக்கு 48 மணி நேரம் முன், டிவி, ரேடியோ, சமூக வலைதளங்கள் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் ஊடகங்களில் அரசியல் விளம்பரங்கள் வெளியிட தற்போது தடை உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், பிரிவு 126-ன் கீழ் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தித் தாள்களுக்கு இத்தடையை நீட்டிக்க தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.
கடந்த மே மாதம் சட்ட அமைச்சகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையம் நசீம் ஜைதி, தேர்தல் ஆணையர்கள் ஏ.கே.ஜோதி, ஓ.பி.ராவத் ஆகியோர் இதனை வலியுறுத்தினர்.
இந்தப் பரிந்துரையை முதன்முதலில் கடந்த 2012- ஏப்ரலில் தேர்தல் ஆணையம் அளித்தது. இதற்கு சட்ட ஆணையமும் ஆதரவு தெரிவித்தது.
கடந்த ஆண்டு அக்டோபர் நவம்பரில் நடந்த பிஹார் சட்டப்பேரவை தேர்தலின்போது, புகாருக்கு உள்ளான அரசியல் விளம்பரங்களுக்குத் தேர்தல் ஆணையம் தனது அரசியல் சாசன அதிகாரத்தைப் பயன்படுத்தி தடை விதித்தது. பிரிவினையைத் தூண்டும் வகையில் இந்த விளம்பரங்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியது.
இதன் பிறகு கடந்த ஏப்ரலில் நடைபெற்ற அசாம், மேற்கு வங்க தேர்தலின்போது, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவைத் தேர்தல் ஆணையம் நியமித்தது. இக்குழுவின் ஒப்புதல் பெற்ற அரசியல் விளம்பரங்களை மட்டுமே வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில் செய்தித் தாள்க ளில் அரசியல் விளம்பரம் தொடர் பான தனது முந்தைய பரிந்துரையை தேர்தல் ஆணையம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.