

மத்திய அரசு அறிவித்துள்ள ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு எதிராக மத்திய அரசு ஊழியர்கள் சம்மேளனம் அறிவித்துள்ள போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் அஜய் மக்கான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாடு விடுதலை அடைந்து 70 ஆண்டுகளில் காங்கிரஸ் அல்லது காங்கிரஸ் தலைமையிலான அரசுகள்தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியக்குழுக்களை அமைத்துள்ளன, 2003 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி 6 வது ஊதியக்குழுவை அமைக்க மறுத்து, இப்போது வந்துள்ள பாஜக தலைமையிலான அரசாவது வாய்ப்பை பயன்படுத்தி ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை மேம்படுத்தி குறைந்தபட்சம் 40 சதவிகித ஊதிய உயர்வை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
5 ஆவது 6 ஆவது ஊதியக்குழுக்கள் 20 சதவிகித ஊதிய உயர்வுக்கு பரிந்துரை செய்தபோதும் முந்தைய அரசுகள் அதை உயர்த்தி 40 சதவிகித உயர்வை அறிவித்து அமலாக்கின, ஆனால் தற்போதைய அரசு ஏழாவது ஊதியக்குழுவின் 14.27 சதவிகித உயர்வு பரிந்துரைகளை அப்படியே எந்தவித உயர்வும இன்றி அறிவித்துள்ளது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது, அவர்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஜூலை 11 முதல் வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பை செய்துள்ளனர். மத்திய அரசு ஊழியர்கள் சம்மேளனம் அறிவித்துள்ள போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.