

தொழிலதிபர் விஜய் மல்லையாவை அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்று பண மோசடித் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மத்திய அமலாக்கத்துறையினரின் கோரிக்கையை ஏற்று சிறப்பு நீதிபதி பி.ஆர்.பாவ்கே இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
ஜூன் 10-ம் தேதி அமலாக்க இயக்ககம் நிதிமோசடித் தடுப்பு நீதிமன்றத்தை அணுகி மல்லையாவை அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்/று அறிவிக்க வேண்டும் என்று மனு செய்திருந்தனர். குற்ற நடைமுறை சட்டம் பிரிவு 82-ன் கீழ் மல்லையாவை அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்று உத்தரவிட வேண்டும் என்று அமலாக்க இயக்ககம் கோரிக்கை வைத்தது.
நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளிடம் ரூ.9,000 கோடி கடன் வாங்கி, திருப்பித் தராமல் கடந்த மார்ச் 2-ம் தேதி லண்டனுக்குப் பறந்தார் விஜய் மல்லையா. மேலும் தன் மீதுள்ள வழக்குகளைச் சந்திக்கவும் அவர் மறுத்து விட்டார். இவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்க பிரிவினர் மோசடி வழக்குகள் பலவற்றைத் தொடர்ந்துள்ளனர்.
இவருக்கு எதிராக பல்வேறு நீதிமன்றங்கள் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகளை பிறப்பித்துள்ளன.
விஜய் மல்லையாவுக்கு சொந்தமான ரூ.1,411 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கப் பிரிவினர் சமீபத்தில் முடக்கியுள்ளனர், இதற்கு மல்லையா எதிர்ப்பு தெரிவித்ததோடு, அமலாக்கப் பிரிவினர் பாரபட்சமாக செயல்படுவதாகச் சாடியிருந்தார்.
இந்நிலையில் அமலாக்கப்பிரிவினரின் கோரிக்கைக்கு இணங்க விஜய் மல்லையா அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்று முத்திரைக் குத்தப்பட்டுள்ளார்.