

முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜொத்சிங் சித்து காங்கிரஸில் சேர்வதில் இழுபறி தொடர்கிறது. இவருக்கு இரண்டாவது முறையாக ராகுல் காந்தியுடன் சந்திப்பு முடிந்தும் பலன் கிடைக்காமல் உள்ளது.
பஞ்சாபின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக இருப்பவர் சித்து. இதன் அம்ருத்ஸர் தொகுதியில் மக்களவைக்கு தொடர்ந்து இரண்டு முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அதில் இருந்து வெளியேறி இருந்தார். இதற்கு முன்பாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் பரிந்துரையின் பேரில் சித்து மாநிலங்களவை உறுப்பினராகவும் குடியரசு தலைவரால் அமர்த்தப்பட்டிருந்தார். ஆனால், அதையும் ராஜினாமா செய்து பாஜகவில் இருந்து வெளியேறினார் சித்து. தற்போது பஞ்சாப் சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 4-ல் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சித்து காங்கிரஸில் சேர்வதற்கானப் பேச்சுவார்த்தை சில மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இதன் ஒருகட்டமாக நேற்று சித்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை இரண்டாவது முறையாக சந்தித்தார். ஆனால், இதில் இன்னும் ‘பேரம்’ முடியாமல் இழுபறி தொடர்வதாகக் கருதப்படுகிறது.
இது குறித்து ‘தி இந்து’விடம் பஞ்சாப் காங்கிரஸ் நிர்வாகிகள் வட்டாரம் கூறுகையில், ‘பஞ்சாபில் தனக்கு உள்ள ஊழலற்ற தலைவர் எனும் பெயர் காரணமாக சித்து காங்கிரஸின் துணை முதல் அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கும்படி வலியுறுத்தி வருகிறார். இதற்கு காங்கிரஸின் மூத்த தலைவரும் முன்னாள் முதல் அமைச்சருமான கேப்டன் அம்ரேந்தர்சிங் ஒத்துக்கொள்ள மறுத்து வருவதால் சிக்கல் நீடிக்கிறது. எனினும், அவருக்கு காங்கிரஸில் சேர்வதை தவிர வேறு வழியில்லை என்பதால் எந்நேரமும் கட்சியில் அவரது வரவு எதிர்பார்க்கப்படுகிறது.’ எனத் தெரிவித்தனர்.
சித்துவிற்கு முன்பாக அவரது மனைவியான நவ்ஜோத் கவுர் காங்கிரஸில் இணைந்து விட்டார். இவர் பாஜகவில் போட்டியிட்ட அம்ருத்ஸர் கிழக்கு தொகுதி சித்துவிற்காக காங்கிரஸ் ஒதுக்கியுள்ளது. பஞ்சாபில் மொத்தம் உள்ளா 117 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 4-ல் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ் இதுவரை தனது 100 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. பஞ்சாபில் வழக்கமாக இருமுனைப்போட்டி நிலவும். ஆனால், டெல்லியின் முதல் அமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் காரணமாக அவரது, ஆம் ஆத்மி கட்சியும் இந்தமுறை கடும் போட்டியில் உள்ளது.