தடையை எதிர்த்து ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆய்வு அறக்கட்டளை உயர் நீதிமன்றத்தில் மனு

தடையை எதிர்த்து ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆய்வு அறக்கட்டளை உயர் நீதிமன்றத்தில் மனு
Updated on
1 min read

இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆய்வு அறக்கட்டளை தங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது.

சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜாகிர் நாயக்கின் அறக்கட்டளைக்கு மத்திய அரசு தடை விதித்தது. இளைஞர்களை ஐஎஸ் தீவிரவாதத்தில் இணைய இந்த அமைப்பு உதவிபுரிவதாக மத்திய அரசு தடைக்கான காரணங்களில் ஒன்றாக குறிப்பிட்டிருந்தது.

இது குறித்து இஸ்லாமிய அறக்கட்டளை சார்பில் வாதாடிய வழக்கறிஞர் சட்ட விரோத தொடர்பு என்று அரசு அளித்த அறிவிக்கையில் தடைக்கான காரணங்கள் கூறப்படவில்லை என்று தெரிவித்தார்.

இதனையடுத்து, மத்திய அரசு பதிலளிக்கையில், “இளைஞர்களை தீவிரவாதத்திற்கு திருப்புகிறது இந்த அமைப்பு. ஐஎஸ்.இல் இணைய நிறைய இளைஞர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் மதபோதகர் ஜாகிர் நாயக் பேச்சுக்கள்தான் தங்க்ளுக்கு உத்வேகம் அளித்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். இதைவிட ஒரு நாட்டுக்கு அவசரமான சூழ்நிலை என்னவாக இருக்க முடியும்? பிரளயம் ஏற்படும் வரை காத்திருக்க வேண்டுமா என்ன?” என்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் சச்தேவிடம் தெரிவித்துள்ளது.

மேலும் “தடைக்கான அனைத்து காரணங்களும் கூறப்பட்டுள்ளன, இதற்கு முன்பாகவே கூட அமைப்பின் உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்” என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் தெரிவித்தார்.

தடை அறிவிக்கையில் ஜாகிர் நாயக் இந்துக் கடவுளர்கள் பற்றி தரக்குறைவாக பேசியதும், அல் கய்தா பயங்கரவாதி ஒசாமா பின் லேடனை உயர்த்திப் பேசியதையும் காரணமாக காட்டியுள்ளதாக சஞ்சய் ஜெயின் தெரிவித்தார்.

மேலும் ஜாகிர் நாயக் தனது மத போதனைகளில் பல்வேறு மதப்பிரிவினர்களிடையே கசப்புணர்வையும், வெறுப்புணர்வையும் பரப்புவதாகவும் அறிவிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதை நீதிபதியிடம் எடுத்துரைத்தார்.

எனவே, “இதே விவகாரத்தை நீதித் தீர்ப்பாயம் கையில் எடுத்துள்ள போது, இதற்காகவே தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ள போது நீதிமன்றம் இதில் தலையிடக் கூடாது” என்றார் சஞ்சய் ஜெயின்.

ஆனால் நீதிபதி அமர்வு, தடை அறிவிப்பு தொடர்பான ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு அடுத்த செவ்வாய்க் கிழமைக்கு வழக்கை ஒத்தி வைத்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in