Last Updated : 23 Oct, 2016 06:31 PM

 

Published : 23 Oct 2016 06:31 PM
Last Updated : 23 Oct 2016 06:31 PM

உ.பி. தேர்தலில் தீவிரமாக பிரியங்கா காந்தி களம் இறங்கினால் காங்கிரஸ் கட்சியில் அற்புதங்கள் நடக்கும்: ஷீலா தீட்சித்

உத்தரப் பிரதேச தேர்தலில் பிரியங்கா காந்தி தீவிரமாக களம் இறங்கினால், காங்கிரஸ் கட்சியில் வியக்கத்தக்க மாற்றங்கள் ஏற்படும் என்று முதல்வர் வேட்பாளர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் சார்பில் முதல்வர் வேட்பாளராக, டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் (78) அறிவிக்கப்பட்டுள்ளார். உ.பி. தேர்தலை முன்னிட்டு அந்த மாநிலத்தில் கிசான் யாத்திரையை காங்கிரஸ் துணைத் தலைவர் மேற்கொண்டுள்ளார். அத்துடன் ஷீலா தீட்சித்தும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில் டெல்லி இன்று செய்தியாளர்களிடம் ஷீலா தீட்சித் கூறியதாவது:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதலை, தனது அரசியல் லாபத்துக்குப் பயன்படுத்த பாஜக முயற்சிக்கிறது. ஆனால், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உ.பி.யில் யாத்திரை மேற்கொண்டு காங்கிரஸாரை உற்சாகப்படுத்தி உள்ளார். இந்தச் சூழ்நிலையில், அவரது சகோதரி பிரியங்கா காந்தி உ.பி. தேர்தலில் தீவிரமாக களம் இறங்கினால், காங்கிரஸ் கட்சியில் வியக்கத்தக்க மாற்றங்கள், அற்புதங்கள் ஏற்படும்.

அதன்பிறகு பாஜக எடுக்கும் எந்த நடவடிக்கையும் உ.பி. தேர்தலில் பலன் அளிக்காது. பிரியங்கா வந்தால் காங்கிரஸ் கட்சி பல மடங்கு பலமுள்ளதாகி விடும். அப்போது பாஜக.வை உ.பி. மக்கள் நிராகரித்து விடுவார்கள். உ.பி. தேர்தலில் பிரிவினையை ஏற்படுத்த பொது சிவில் சட்டம் என்ற கருத்தை பாஜக முன்னெடுத்துள்ளது. அத்துடன் மதப் பிரிவினையை ஏற்படுத்தவும் முயற்சிக்கின்றது.

இவ்வாறு ஷீலா தீட்சித் கூறினார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ''உ.பி.யில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பிரச்சினை முக்கியமானதாக இருக்கிறது. எனவே, பிராந்தியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இருக்கும்'' என்று ஷீலா தீட்சித் பதில் அளித்தார்.

ஷீலா தீட்சித் மேலும் கூறும்போது, ''உ.பி.யில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. ஆனால், அடுத்த அரசு அமைய காங்கிரஸ் மிகப்பெரிய பங்கு வகிக்கும்’’ என்றார். அதேசமயம் தேர்தலுக்குப் பிறகு சமாஜ்வாதி அல்லது பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்கவும் தயங்காது'' என்று சூசகமாக தெரிவித்தார்.











FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x