

முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சி செய்யும் உ.பி.யில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தல் பிரச்சாரத்தில் சமூக வலைதளங்கள் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. உ.பி.யில் தற்போது தீவிரப் பிரச்சாரத் தில் இறங்கியுள்ள காங்கிரஸ், ஏற்கெனவே சமூக வலைதளங் களை பயன்படுத்தத் தொடங்கி விட்டது. இதை புரிந்துகொண்ட முதல்வர் அகிலேஷ்சிங் யாதவ், தேர்தலுக்குப் பிறகு இளைஞர்களுக்கு ‘ஸ்மார்ட் போன்’ இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளார். எனவே இந்த விஷயத்தில் பாஜக பின்தங்கியிருக்க விரும்பவில்லை. ஏனெனில் சமூக வலைதளங்கள் பயன்படுத்தும் தலைவர்களை அதிகம் கொண்ட கட்சியாக பாஜக கருதப்படுகிறது.
பாஜக சார்பில் நாடாளுமன்ற இரு அவை உறுப்பினர்களின் கூட்டம் டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்றது. சமூக வலைதளங் கள் பயன்பாடு தொடர்பான இக்கூட்டத்தில் ஒவ்வொரு எம்.பி.யும் ட்விட்டர் மற்றும் முகநூல் பயன்படுத்துவதுடன் அவர்களை பின்தொடர்வோர் எண்ணிக்கை சுமார் 50 ஆயிர மாக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதேபோன்ற உத்தரவு உ.பி. தேர்தலில் போட்டி யிட வாய்ப்பு கேட்கும் வேட்பாளர் களுக்கும் இடப்பட்டுள்ளது.
இது குறித்து அக்கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜகவின் உ.பி. எம்.பி.க்கள் வட்டாரம் ‘தி இந்து’விடம் கூறும்போது, “ஒருவரை ’டிவிட்டரில் பின் தொடர்வோர் மற்றும் அவரது முகநூல் நண்பர்கள் எண்ணிக்கை, அவர் சமூகத்துடன் இணைந்திருக்கும் அளவை காட்டுகிறது. இதனால் வேட்புமனு தாக்கல் செய்ய விரும்புவோருக்கு அவர்களின் சமூக வலைதளப் பக்கங்களில் குறைந்தது 25,000 பேராவது பின்தொடர்வோர் இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் சமூக வலைதளங்களை இதுவரை பயன்படுத்தாதவர்கள், இதற்காக பயிற்சி வகுப்புகள் செல்வதும், பயிற்சியாளர்களை வீட்டுக்கே அழைத்துவந்து கற்பதுமாக உள்ளனர். இன்னும் பலர் பின்தொடர்வோர் எண்ணிக்கை பெறுவதற்கு என்ன செய்வது என்ற ஆலோசனையில் மூழ்கியுள்ளனர்” என்று தெரிவித்தனர்.
முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களை தேர்தல் பிரச்சாரத்துக்கு ஆம் ஆத்மி கட்சியே முதலில் பயன்படுத்தியதாக கருதப்படுகிறது. இதைத் தொடர்ந்து கடந்த மக்களவை தேர்தலில் பாஜக இணையதளம் மூலம் தீவிரப் பிரச்சாரம் செய்தது. இத்தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடி, சமூக வலைதளங்களில் தீவிர அங்கம் வகித்து வருகிறார். இத்துடன் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தில் சமூக வலைதளங்களுக்கு அவர் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். வரும் காலங்களில் இந்தியாவில் சமூக வலைதளங்கள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என மோடி கருதுகிறார். அதனால் தனது அமைச்சர்கள் மற்றும் கட்சி எம்.பி.க்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த அவர் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார்.