

மத்தியில் 10 ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத மோசமான ஆட்சி நடைபெறுவதாக ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சியான சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது.
இதுகுறித்து சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டை மாற்றுவதற்காக, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு பெண் தனது குழந்தையுடன் டெல்லியில் உள்ள ரிசர்வ் வங்கி மண்டல அலுவலகத்துக்கு சென்றுள்ளார்.
ஆனால் அங்கு ரூபாய் நோட்டை மாற்ற முடியாத விரக்தியில் வங்கியின் முன்பு தனது மேலாடையை கழற்றிவிட்டு அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அந்தப் பெண்ணின் அவல நிலை, அரசின் ஆதரவுடன் நடந்த நிர்பயா சம்பவத்தைப் போல உள்ளது. பெண்களுக்கு எதிரான இதுபோன்ற சம்பவங்கள் தலிபான்கள் ஆட்சியில்தான் நடைபெறும்.
மத்திய அரசின் இந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் ஆதரவு அளிக்கிறார். இந்த சம்பவத்துக்குப் பிறகும் உங்கள் ஆதரவு மத்திய அரசுக்கா அல்லது அந்த பெண்ணுக்கா என தெரிவிக்க வேண்டும்.
பெண்களுக்கு ஏற்படும் இதுபோன்ற பாதிப்பை அரசு புரிந்துகொள்ளவில்லை என்றால், இதுபோன்ற இரக்கமற்ற அரசு 10 ஆயிரம் ஆண்டுகளில் ஆட்சியில் இருந்திருக்கவே முடியாது என்றே கூறலாம்.
முட்டாள்களின் சொர்க்கத்தில் பாஜக வாழ்கிறது. அதனால்தான் பண மதிப்பு நீக்கத்தால் கறுப்புப் பணம் ஒழிந்துவிடும் என்று கருதுகிறது. ஆனால், இந்த நடவடிக்கையால் சாதாரண ஏழை, நடுத்தர மக்கள்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதுதான் உண்மை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.