

பெங்களூருவில் உள்ள அலோசியஸ் டிகிரி கல்லூரியில் உருவாக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் குடில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தக் குடிலில் நாட்டில் தற்போது பெரிதும் பேசப்படும் பண மதிப்பு நீக்கம், விவசாயிகள் தற்கொலை, தலித் மக்கள், பெண்களுக்கு எதிரான வன்முறை, சிறை தண்டனைக்கு ஆளாக நேரும் அப்பாவிகளின் நிலை ஆகியவை பிரதானமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்தக் குடிலை உருவாக்கிய அலோசியஸ் கல்லூரியின் தாளாளரும், எழுத் தாளருமான அருட்தந்தை ஆம்ரோஸ் பின்ட்டோ கூறும் போது, “யேசு கிறிஸ்துவை ஒரு மதத்திற்கு மட்டுமே உரியவராக பார்க்கக் கூடாது. சாதாரண மனிதராக பிறந்து, மக்களின் பிரச் சினைகளை தீர்க்கும் போதனை களை அவர் மேற்கொண்டார்.
மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை மக்களின் அன்றாட வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது. ஏடிஎம் மையங்களும், வங்கிகளும் அப்பாவி மக்களின் உயிரை காவு வாங்கும் இடங்களாக மாறி யுள்ளன. அரசின் தவறான விவ சாயக் கொள்கையால் ஆயிரக் கணக்கான விவசாயிகள் தற் கொலை செய்துகொண்டுள்ளனர். நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபடாத அப்பாவிகளும் சிறையில் அடைக்கப்பட்டு, பெரும் துயருக்கு ஆளாகியுள்ளனர். இதேபோல் தலித் மக்கள் மீதும் பெண்கள் மீதும் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கருத்துகளை வலியுறுத்தும் வகையில் இந்தக் குடிலை உருவாக்கியுள்ளேன்.
இதற்கு படைப்பாளிகளிடமும், சமூக ஆர்வலர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த கல்லூரியின் மாணவர்களும் குடிலை மிக ஆர்வமாகப் பார்த்து, அதனுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர்” என்றார்.