

எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத நிலையிலும், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம், லோக்பால் உள்ளிட்ட சட்டப்பூர்வ அமைப்புகளில் முக்கிய நியமனங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மக்களவைச் செயலகத்தின் பரிந்துரையை அடுத்து மத்திய அரசு இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம் உள்ளிட்ட சட்டப்பூர்வ அமைப்புகளில், முக்கிய பொறுப்புகளை நியமனம் செய்ய, பிரதமர் தலைமையிலான குழு உரிய நபரைப் பரிந்துரைக்கும்.
இக்குழுவில் எதிர்க்கட்சித் தலைவரும் இடம்பெற்றிருப்பார். ஆனால், தற்போதைய மக்களவை யில் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து யாருக்கும் வழங்கப்பட வில்லை. காங்கிரஸுக்கு எதிர்க் கட்சித் தலைவர் வழங்கப்பட வேண்டும் என அக்கட்சி பெரும் பிரயத்னம் செய்தது.
ஆனால், எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பு யாருக்கும் வழங்கப்பட மாட்டாது என மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அறிவித்து விட்டார். இதைத்தொடர்ந்து, முக்கியப் பொறுப்புகளை நியமிப்பதில் எதிர்க்கட்சித் தலைவரின் பங்கு குறித்து மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அமைச்சகம், மக்களவை செயலகத்துக்கு கடிதம் எழுதியது.
அக்கடிதத்துக்குப் பதிலனுப்பி யுள்ள மக்களவைச் செயலகம், மக்களவையில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் யாரும் இல்லை எனத் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் இன்றி, முக்கியப் பொறுப்புகளை நிரப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர், ஊழல் கண்காணிப்பு ஆணையர், தேசிய மனித உரிமை ஆணையரகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், லோக்பால் ஆகிய பதவிகளை நிரப்ப, தேர்வுக்குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் இடம்பெற்றிருப்பது கட்டாயமில்லை என மத்திய அரசு வட்டாரம் தெரிவித்துள்ளது.
சட்டம் என்ன சொல்கிறது?
சட்டம் என்ன சொல்கிறது?
மத்திய ஊழல் கண்காணிப்புச் சட்டம் 2003-ன்படி, பிரதமர் தலைமையில் உள்துறை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரடங்கிய மூவர் குழு பரிந்துரையின் பேரில், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் (சிவிசி), ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஆகியோரை குடியரசுத் தலைவர் நியமிப்பார்.
அதேசமயம், எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத நிலையில், மக்களவையில் எதிர்க்கட்சிகளில் தனிப்பெரும் கட்சியாக உள்ள ஒன்றின் தலைவரை இம்மூவர் குழுவில் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளலாம்.
குழுவில் ஒரு காலியிடம் இருப்ப தால் மட்டுமே, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் அல்லது ஊழல் கண்காணிப்பு ஆணைய ரைத் தேர்வு செய்ய முடியாது என் பதைக் காரணமாகக் கூற முடியாது எனவும் அச்சட்டம் கூறுகிறது.
மனித உரிமைகள் சட்டம் 1993-ன் படி, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பிரதமரைத் தலைவராகவும் மக்களவைத் தலைவர், உள்துறை அமைச்சர், மக்களவை மற்றும் மாநிலங்களை எதிர்க்கட்சித் தலைவர்கள், மாநிலங்களவைத் தலைவர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட தேர்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் நியமிப்பார்.
அதே சமயம், தேர்வுக்குழுவில் எந்த உறுப்பினர் பதவியிடமாவது காலியாக இருக்கிறது என்ற காரணத்துக்காக மட்டுமே, மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் அல்லது உறுப்பினர் பதவி நியமனத்தை செல்லாதது எனக் கூற முடியாது என அச்சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைப் போலவே, லோக்பால் மற்றும் லோக் ஆயுக்த சட்டம் 2013-ம், தேர்வுக் குழு உறுப்பினர் பதவியிடம் காலியாக இருக்கும் காரணத்துக்காக நியமனங்கள் செல்லாது எனக் கூற முடியாது எனத் தெரிவிக்கிறது. ஆகவே, இந்த முக்கிய நியமனங்களை எதிர்க்கட்சித் தலைவர் இன்றி நியமனம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
தகவல் ஆணையர்:
மத்திய தகவல் ஆணையத்தின் (சிஐசி) தலைமைத் தகவல் ஆணையர், தகவல் ஆணையர்கள் பதவியிடங்களை நிரப்புவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இதில், தலைமைத் தகவல் ஆணையர் பதவியை நிரப்பும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளாமல் நிறுத்தி வைத் துள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு சிஐசி தொடங்கப்பட்டதிலிருந்து அந்த அமைப்பின் தலைவர் பதவி நிரப்பப்படாமல் இருப்பது இதுவே முதல் முறையாகும்.
மத்திய தலைமைத் தகவல் ஆணையர் ராஜீவ் மாத்தூர் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி பதவி விலகி யது குறிப்பிடத்தக்கது.