

ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ம் தேதி நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் பிரதமர் மோடியின் தொலைக்காட்சி உரையை மாண வர்கள் கேட்க வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெறவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைமைக் குழு புதன்கிழமை வெளி யிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் தேசத்துக்கு ஆற்றிய உரைகளின் போதுகூட இப்படி கட்டாயம் செய்யப்படவில்லை. இது ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதாவால், இளம் மனங்களில் தங்கள் தத்துவத்தை புகுத்த செய்யப் படும் முயற்சியாகும். இந்த உத்தரவு கட்டாயம் இல்லை என்று பின்னர் மத்திய அமைச்சர் கூறினாலும், பெரும்பாலான பள்ளிகள் அரசுப் பள்ளிகளாகவோ, அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளாகவோ இருப்பதால் இது நிர்ப்பந்தம் செலுத்தும் உத்தரவாகும்.
1976-ம் ஆண்டு அவசரநிலை காலத்தில் கல்வி, மத்திய - மாநில அரசுப் பட்டியலில் கொண்டு செல்லப்பட்டாலும், ஆரம்பக் கல்வி இன்னமும் மாநில அரசுகளின் பொறுப்பிலேயே உள்ளது. எனவே, இது கூட்டாட்சி முறைக்கு எதிரானது என்று சில மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
ஆசிரியர் தினம் இந்தியாவின் சிறந்த கல்வியாளரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளாகும். சிறந்த ஆசிரியர்களை கவுரவிக்கும் தினமாகும். எனவே மோடி அரசு இந்த உத்தரவைத் திரும்பப் பெறவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.