நாட்டில் இந்து மக்கள்தொகை குறைகிறது; சிறுபான்மையினர் எண்ணிக்கை உயர்கிறது: உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு சர்ச்சை கருத்து

நாட்டில் இந்து மக்கள்தொகை குறைகிறது; சிறுபான்மையினர் எண்ணிக்கை உயர்கிறது: உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு சர்ச்சை கருத்து
Updated on
1 min read

நாட்டில் இந்து மக்கள் தொகை குறைந்து வருகிறது. ஆனால் சிறுபான்மையின மக்கள் தொகை அதிகரித்து வருகிறது என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார். அமைச்சரின் இந்தக் கருத்து சர்ச்சையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“அருணாச்சலப் பிரதேசத்தை இந்து மாநிலமாக மாற்றுவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு முயற்சி செய்கிறது” என அம்மாநில காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.

இதற்கு பதிலளிக்்கும் வகையில் கிரண் ரிஜிஜு தனது ட்விட்டர் பதிவில் கூறும்போது, “இந்தியாவில் இந்து மக்கள் தொகை குறைந்து வருகிறது. அவர்கள் ஒருபோதும் பிற மதத் தினரை இந்துக்களாக மாற்றியது இல்லை. இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளில் சிறுபான்மையின மக்கள் தொகை குறைந்துவரும் போதிலும் இந்தியாவில் சிறுபான்மையின மக்கள் தொகை அதிகரித்து வருகிறது.

பொறுப்பற்ற முறையில் காங்கிரஸ் கருத்து கூறக்கூடாது. அருணாச்சலப் பிரதேசத்தில் அனைத்து மக்களும் ஒற்றுமை யுடன் அமைதியாக வாழ்கின்றனர். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு அனைத்து மதத்தினரும் சுதந்திரமாகவும் அமைதியாகவும் வாழ்கின்றனர்” என்றார். அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவரான கிரண் ரிஜுஜு பவுத்தர் ஆவார்.

இவரது கருத்துக்கு ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி பதில் அளிக்கும்போது, “கிரண் ரிஜிஜு இந்துக்களுக்கு மட்டுமல்ல, இந்தியர்கள் அனைவருக்கும் அமைச்சர். அவர் பதவியேற்கும்போது என்ன உறுதிமொழி எடுத்துக்கொண்டார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்துக்கள் 80.5%, முஸ்லிம்கள் 13.4%, கிறிஸ்தவர்கள் 2.3%, சீக்கியர்கள் 1.9%, பவுத்தர்கள் 0.8%, ஜைனர்கள் 0.4% ஆக இருந்தனர். 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்துக்கள் 79.8%, முஸ்லிம்கள், 14.23%, கிறிஸ்தவர்கள் 2.3%, சீக்கியர்கள் 1.72% பவுத்தர்கள் 0.7% ஜைனர்கள் 0.37% உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in