பத்ம விருதுக்கு பெருமை சேர்த்த கதாநாயகர்கள்
குடியரசுத் தினத்தையொட்டி அண்மையில் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. அவர்களில் சிலரின் சமூக சேவை பத்ம விருதுக்கே பெருமை சேர்ப்பதாக உள்ளது.
தன்னார்வ தீயணைப்பு வீரர்
கொல்கத்தாவைச் சேர்ந்த தன்னார்வ தீயணைப்பு வீரர் பிபின் கனத்ராவுக்கு (59) பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.
பிபினுக்கு 12 வயது இருக்கும்போது அவரது மூத்த சகோதரர் தீபாவளி பட்டாசு விபத்தில் உயிரிழந்தார். அந்தச் சம்பவம் அவரது வாழ்க்கையை மாற்றியது. பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, எங்கு தீ விபத்து நேரிட்டாலும் முதல் ஆளாக அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்.
அவர் கூறியபோது, இதுவரை 100-க்கும் மேற்பட்ட தீ விபத்துகளை தடுக்க போராடியுள்ளேன். பலரின் உயிரைக் காப்பாற்றியுள்ளேன் என்று தெரிவித்தார்.
மரங்களின் மனிதன்
தெலங்கானாவின் கம்மம் மாவட்டம் ரெட்டிபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தரிபள்ளி ராமையா (80). மரங்களின் மனிதன் என்று அழைக்கப்படும் ராமையாவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மரங்களை நட்டு வளர்த்துள்ளார். அவர் கூறியபோது, ஒரு மரக்கன்று பட்டுப்போனால்கூட எனது உயிரை இழந்ததை போல வாடுவேன் என்று தெரிவித்தார்.
சிற்றாறை மீட்ட போராளி
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்தவர் பாபா பல்பீர் சிங் சீச்சேவால். அவர் சுமார் 16 ஆண்டுகள் போராடி 160 கி.மீ. நீளமுடைய காலி பெய்ன் சிற் றாறை மீட்டெடுத்துள்ளார். அவர் கூறியபோது, பத்மஸ்ரீ விருது என் னோடு போராடிய மக்களுக்கு கிடைத்த விருது என்று தெரிவித்தார்.
களரி ஆசான்
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் வடகரா பகுதியைச் சேர்ந்தவர் மீனாட்சி குருக்கள். 76 வயது மூதாட்டியான அவர், களரியில் இன்றளவும் ஆணுக்கு சரிநிகர் சமமாக சண்டையிடுகிறார். நூற்றுக்கணக்கான மாணவிகளுக்கு இந்த தற்காப்பு கலையை கற்றுக் கொடுத்துள்ளார். அவர் கூறியபோது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் அவர்களுக்கு களரி சண்டையை கற்றுக் கொடுத்து வருகிறேன் என்று தெரிவித்தார்.
இலவச டாக்டர்
மத்தியப் பிரதேசம் இந்தூரைச் சேர்ந்த மகப்பேறு டாக்டர் பக்தி யாதவ் (91). கடந்த 1948-ம் ஆண்டு முதல் இந்தூரில் இலவச மருத்துவ சேவையாற்றி வருகிறார். அவர் கூறியபோது, எனக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருப்பது தன்னலம் இல்லாமல் சமுதாயத்துக்கு சேவையாற்றி வருபவர்களை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது என்றார்.
