உத்தரப் பிரதேசத்தில் 6-ம் கட்ட தேர்தல்: 49 தொகுதிகளில் 57 சதவீத வாக்குப் பதிவு

உத்தரப் பிரதேசத்தில் 6-ம் கட்ட தேர்தல்: 49 தொகுதிகளில் 57 சதவீத வாக்குப் பதிவு
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தில் 6-ம் கட்டமாக 49 தொகுதிகளுக்கு நேற்று நடந்த தேர்தலில் 57 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இதுபோல மணிப்பூர் மாநில முதல்கட்ட தேர்தலில் 84 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

உ.பி.யில் மொத்தம் 403 இடங்களைக் கொண்ட சட்டப் பேரவைக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் இதுவரை 5 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. 6-ம் கட்டமாக 7 மாவட்டங்களுக்குட்பட்ட 49 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புக்கு நடுவே நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது.

சுமார் 84 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்திய-நேபாள எல்லை தேர்தலை முன்னிட்டு மூடப்பட்டது. பக்கத்து மாவட்ட எல்லையிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அத்தியா வசியமான வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.

இந்தத் தேர்தலில் 57.03 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி டி.வெங்டேஷ் தெரிவித்தார். எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் வாக்குப் பதிவு அமைதி யாக நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார். 2012 தேர்தலில் இந்தப் பகுதியில் 55 சதவீத வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்தலில் 63 பெண்கள் உட்பட 635 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 1.72 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். பகுஜன் சமாஜ் அனைத்து (49) தொகுதிகளிலும், பாஜக 45 தொகுதிகளிலும், சமாஜ்வாதி 40 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங்கின் அசம்கார் மக்களவை தொகுதி, சர்ச்சைக் குரிய பாஜக பிரமுகர் யோகி ஆதித்யநாத்தின் கோரக்பூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகள் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்ற பகுதிகளில் குறிப்பிடத் தக்கவை ஆகும்.

கடந்த 2012 தேர்தலில் முலாயம் சிங் தொகுதிக்குட்பட்ட 10 பேரவைத் தொகுதிகளில் 9-ல் சமாஜ்வாதி வெற்றி பெற்றது. ஆனால் இந்தத் தேர்தலில் முலாயம் சிங் இங்கு பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை.

மணிப்பூரில் 84 சதவீதம்

மணிப்பூர் மாநிலத்தில் 60 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக 38 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 168 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சுமார் 19 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

நேற்று காலையிலிருந்து விறு விறுப்பாக வாக்குப்பதிவு நடை பெற்றது. இதில் 84 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி விவேக் குமார் தேவங்கன் தெரிவித்தார்.

உ.பி. மற்றும் மணிப்பூரில் இறுதி கட்ட தேர்தல் வரும் 8-ம் தேதி நடைபெறுகிறது. கோவா, மணிப் பூர், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய 5 மாநிலங் களில் தேர்தல் முடிவுகள் வரும் 11-ம் தேதி வெளியாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in