Published : 28 Jun 2019 07:10 PM
Last Updated : 28 Jun 2019 07:10 PM

9 மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும், இல்லையேல் சம்பளம் ‘கட்’ - உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உத்தரவினால் கலக்கத்தில் அரசு அதிகாரிகள்

அரசு அதிகாரிகள் 9 மணிக்கு அலுவலகம் வரவில்லையென்றால் சம்பளம் ‘கட்’ என உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளதால் அரசு அதிகாரிகள் கலங்கிப் போயுள்ளனர்.

 

உ.பி.யில் அரசு அதிகாரிகள் காலை 9 மணிக்கு சரியாக அலுவலகம் வரவேண்டும் என யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். சரியாக வரவில்லை என்றால் சம்பளம் ‘கட்’ செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

மாவட்ட மாஜிஸ்ட்ரேட்  மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் காலை 9 மணியிலிருந்து 11 மணி வரையில் மக்களை சந்திக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு அதிகாரிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை எப்போது நாங்கள் வீட்டுக்கு செல்லலாம் என்பதையும் அரசு அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

போலீஸ் அதிகாரி ஒருவர் பேசுகையில், “நேற்று இரவு சாலை விபத்து காரணமாக அதிகாலை 4 மணிக்குதான் வீட்டுக்கு சென்றேன். அப்படியிருக்கையில் காலை 9 மணிக்கு எப்படி அலுவலகம் செல்ல முடியும்? நாங்கள் இப்போது ஒருநாள் முழுவதும் வேலை பார்ப்பது போல்தான் உள்ளது,” எனக் கூறியுள்ளார்.

 

“அரசு அதிகாரிகள் இந்த உத்தரவைப் பின்பற்ற வேண்டும் இல்லையேல் கடும் நடவடிக்கைகளும் தண்டனைகளும் வழங்கப்படும்” என்று உ.பி. முதல்வர் அலுவலக ட்விட்டர் தெரிவிக்கிறது.

 

மேலும் வேலையில் ஓ.பி அடிக்கும், மற்றும் ஊழல் போலீஸ் அதிகாரிகள் பற்றிய தகவல்கள் ஜூன் 30ம் தேதிக்குள் கைக்கு வர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

மாவட்ட மேஜிஸ்ட்ரேட்டுகளும், போலீஸ் உயரதிகாரிகளும் தேவைப்படும் நேரத்தில் இருப்பதில்லை என்று பொதுஜனங்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த ஆண்டும் யோகி ஆதித்யநாத் அரசு இதே உத்தரவைப் பிறப்பித்து மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டது. பல அதிகாரிகள் பயத்தில் விருப்ப ஓய்வு பெற்றுச் சென்றனர். 50 வயதுக்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் திறமையின்மை அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

 

முன்னதா “இன்று உள்துறை கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்யநாத் ஊழல் மற்றும் ஒழுக்க மீறல் போலீஸ் அதிகாரிகள் மீது கடும் காட்டம் காட்டினார். “நேர்மையாக இல்லாத போலீஸ் அதிகாரிகள் அரசுக்குத் தேவையில்லை” என்று கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

இதில் முதன்மைச் செயலர் மட்டத்தில் இருக்கும் ஒரு அதிகாரியும் அதிருப்தி தெரிவித்தார், “இரவு வெகுநேரம் வரை முதல்வர் கூட்டம் நடைபெறுகிறது, நாங்கள் எப்படி 9 மணிக்கு அலுவலகம் வர முடியும்” என்று கூற இன்னொரு அதிகாரி, “நான் 9 மணிக்கு வரவேண்டுமெனில் என் ட்ரைவர் வீட்டிலிருந்து 7.30 மணிக்கு காலையில் கிளம்ப வேண்டும்” என்று அங்கலாய்த்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x