Published : 28 Jun 2019 10:41 AM
Last Updated : 28 Jun 2019 10:41 AM

‘‘தார்மீக உரிமையை இழந்து விட்டார்’’ - மம்தா அழைப்பை ஏற்க சிபிஎம், காங்கிரஸ் மறுப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவை எதிர்த்து போராட இணைந்து செயல்படுமாறு மம்தா பானர்ஜி விடுத்த அழைப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நிராகரித்துள்ளன.

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் 22 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக, இந்தத் தேர்தலில் 18 தொகுதிகளைக் கைப்பற்றியது.

தேர்தலில் இருந்தே இருகட்சி தொண்டர்களிடையே தொடர்ந்து மோதல்கள் நடந்து வருகின்றன.  இந்தநிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, ‘‘மத்தியில் பாஜகவை எதிர்ப்பதற்கு எங்களுடன் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும். வாக்குகள் பாஜகவுக்குச் சென்றால், மாநிலத்தில் வன்முறைதான் நடக்கும்’’ எனக் கூறினார்.

ஆனால் அவரது கோரிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிராகரித்தது. இதனிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் மம்தாவின் கோரிக்கையை நிராகரித்துள்ளன.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள  மேற்குவங்க மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சுஜான் சக்கரவர்த்தி கூறுகையில் ‘‘பாஜகவுக்கு எதிராக போராடும் தார்மீக உரிமையை மம்தா பானர்ஜி இழந்து விட்டார். அவரால் மற்றொரு பாசிச இயக்கத்தை எதிர்க்க முடியாது.

மாநிலத்தில் வன்முறையை தூண்டுவதில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும் பங்குள்ளது. மம்தா கட்சியினரை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இல்லை’’ எனக் கூறினார்.

இதுபோலவே காங்கிரஸ் கட்சியும் மம்தாவை கடுமையாக சாடியுள்ளது. இதுகுறித்து அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் பிரதீப் பட்டாச்சார்யா கூறுகையில் ‘‘மேற்குவங்கத்தில் பாஜக வளர்ந்து வருவதற்கு காரணமே மம்தா பானர்ஜி தான். தனக்கும் பாஜகவுக்கும் மட்டுமே மாநிலத்தில் போட்டி இருப்பது போன்ற தோற்றத்தை அவர் உருவாக்க முயலுகிறார்.

எங்களுடன் இணக்கமாக செல்ல விரும்புவதாக கூறும் அவர் முதலில் திரிணமூல் காங்கிரஸில் சேர்க்கப்பட்ட, எங்கள் கட்சியை சேர்ந்த 17 எம்எம்எல்ஏக்களை மீண்டும் காங்கிரஸூக்கு அனுப்ப வேண்டும். பிறகு பாஜகவை எதிர்த்து போராட எங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்’’ எனக் கூறினார்.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x