

ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வகை செய்யும் தீர்மானத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் இன்று கொண்டு வருகிறார்.
காஷ்மீரில் மெஹ்பூபா முப்தி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக விலக்கிக் கொண்டதையடுத்து 2018, ஜூன் மாதத்தில் 6 மாதகால ஆளுநர் ஆட்சி அங்கு அமல்படுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீரைப் பொறுத்தவரை இது கட்டாயமான சட்டவிதியாகும்.
இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்று அறிக்கை அளித்ததையடுத்து டிசம்பர் 17-ல் மத்திய அமைச்சரவை இந்த முடிவை எடுத்தது. டிசம்பர் 19 நள்ளிரவு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வந்தது.
இது ஜூலை மாதம் 3-ம் தேதி முடிவுக்கு வரும்நிலையில், மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிக்க ஆளுநர் சத்யபால் மாலிக் மத்திய அமைச்சரவைக்குப் பரிந்துரைத்தார். அவரின் பரிந்துரையை ஏற்று, குடியரசுத் தலைவர் ஆட்சிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும் என்பதால் இதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த தீர்மானத்தை தாக்கல் செய்கிறார்.
காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி நீட்டிக்கப்பட்டுள்ளதால் அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் கால தாமதம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.