

நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடையிலும், பொருட்களை வாங்கும் வகையில், ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
மத்திய உணவு மற்றும் பொது விநியோக துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையில் நேற்று தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. பல்வேறு மாநிலங்களின் உணவுத் துறை செயலர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ராம்விலாஸ் பஸ்வான் பேசியதாவது:
நாட்டின் எந்த மூலையிலும் வசிக்கும் மக்கள் எந்த ஒரு ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கும் வகையில் பொது விநியோக திட்டம் மாற்றியமைக்கப்படும். இதற்கு ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் என அழைக்கப்படும்.தெலங்கானா மாநிலம் உட்பட நாட்டின் சில பகுதிகளில் பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்மூலம் ஒருவர் ரேஷன் பொருட்களை வாங்க, ஒரு கடையை மட்டும் சார்ந்திராமல், எந்த கடையிலும் வாங்கும் சுதந்திரம் கிடைக்கும். தங்கள் வசதிக்கு ஏற்ப பொருட்களை வாங்க முடியும். பணி நிமித்தமாக, தங்கள் சொந்த மாநிலத்தை விட்டு, வேறு மாநிலங்களில் வசிப்பவர்கள், தொழிலாளர்கள் பெரிதும் பயனடைவர்.
இடம் பெயருவதாலேயே ஒருவர் ரேஷன் பொருட்களை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதே மத்திய அரசின் நோக்கம். அனைவருக்கும் உணவு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை மத்திய அரசு இலக்காக கொண்டுள்ளது. உணவு பொருட்கள் கையிருப்பை ஆன்லைன் மூலம் உறுதி செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.