Published : 29 Sep 2018 03:58 PM
Last Updated : 29 Sep 2018 03:58 PM

மின் கட்டணம் 5 மடங்கு உயரும்; மோடி அரசின் மின்சாரச் சட்டத்திருத்தம் அவரது ‘நல்ல நண்பர்கள்’ ஆன நிறுவனங்களுக்கே லாபம் ஈட்டித்தரும்- கேஜ்ரிவால் விளாசல்

ஆளும் மோடி தலைமை பாஜக அரசின்  மின்சாரச் சட்டத்திருத்தம் சாமானியர்களுக்கு மின்சாரக் கட்டணத்தை சரமாரியாக உயர்த்த தேர்ந்தெடுக்கப்பட்ட சில பெரிய மின்சார நிறுவனங்களுக்கே கொள்ளை லாபம் அளிக்கக் கூடியதாக இருக்கும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சாடியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் அடுத்தக் கூட்டத் தொடரில் மின்சாரச் சட்டம் 2003 திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுவதாகத் தெரிகிறது. இது குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் செப்.7ம் தேதி வரைவு திருத்த மசோதா அனுப்பப்பட்டது என்று கூறிய அரவிந்த் கேஜ்ரிவால், இதன் மீதான கருத்துகளை 45 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.

“இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம் மின்சார உற்பத்தி மற்றும் விநியோக 2 பெரிய நிறுவனங்களுக்கு கொள்ளை லாபம் கிட்டும், இந்த இரண்டு பெரிய நிறுவனங்களும் நம் பிரதமரின் நல்ல நண்பர்கள்” என்றார் கேஜ்ரிவால்.

வீட்டு உபயோக மின்சாரத்துக்கான மானியத்தை இந்த சட்டத்திருத்தம் ஒழித்து விடுவதால் மின்கட்டணம் டெல்லியில் 2 முதல் 5 மடங்கு உயரும் நிலையே உள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் யூனிட்டுக்கு ரூ.2 மானியம் இருந்துமே இந்த மின் கட்டண உயர்வை ஒன்றும் செய்ய முடியாது என்றார் கேஜ்ரிவால்.

“ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க ரூ.7.40 செலவு. மானியம் இருந்தால் நலிவுற்ற பிரிவினருக்கு மின் கட்டணத்தை குறைக்க முடியும். வர்த்தக, தொழிற்துறை மின் கட்டணங்களை கூட்ட முடியும். மானியத்தை ஒழித்து விட்டால் அனைவரும் யூனிட் ஒன்றுக்கு ரூ.7.40 செலுத்த நேரிடும். எங்கள் மானியம் யூனிட்டுக்கு ரூ.2 இருந்தும் யூனிட்டுக்கு ரூ.5.40 மின் கட்டணம் செலுத்த நேரிடும். இதனால் 200 யூனிட்டுகளுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோருக்கான கட்டணம் தற்போது இருக்கும் ரூ.1லிருந்து ரூ.5.40 ஆகிவிடும்.

மேலும் இதில் ஃப்யூச்சர் ட்ரேடிங்கும் அனுமதிக்கப்படும் என்று தெரிகிறது, இதனால் யூனிட் ஒன்றிற்கு ரூ.7.40 என்பதிலிருந்தும் மேலும் உயரவே வாய்ப்பு.

பாஜக ஆட்சியில் இல்லாத மாநில முதல்வர்களுக்கு நான் எழுதி இதனை கடுமையாக எதிர்க்கக் கோரியுள்ளேன். மக்களவைத் தேர்தலுக்கு முன்னால் இந்த திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வருவது இன்னும் கேள்வியை ஏற்படுத்துகிறது” இவ்வாறு கூறினார் கேஜ்ரிவால்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x