Last Updated : 11 Sep, 2018 02:58 PM

 

Published : 11 Sep 2018 02:58 PM
Last Updated : 11 Sep 2018 02:58 PM

இந்தியா ஒன்றும் வடகொரியா அல்ல: அமித் ஷாவுக்கு காங்கிரஸ் பதிலடி

இந்தியாவில் தொடர்ந்து 50 ஆண்டு காலம் ஆட்சிசெய்யப்போவதாக நினைக்கும் பாஜகவின் பகல் கனவு பலிக்காது; ஏனென்றால் இந்தியா நாடு வடகொரியா போன்றது இல்லை என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சி இனி 50 ஆண்டுகள் இந்தியாவை ஆளும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா நேற்று தெரிவித்திருந்தார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் இதுகுறித்து காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜே வாலா டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

''ஜனநாயகத்தில் நம்பிக்கை அற்றவர்கள் மற்றும் அரசியலமைப்பையும் அதன் மதிப்பையும் நசுக்க விரும்புபவர்களால் மட்டுமே இப்படிப் பேச முடியும்.

ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்று விரும்புகிறவர்கள்தான் மக்கள் ஓட்டுகளைப் பறிக்கவும் நினைக்கிறார்கள். அரசியலமைப்பை தங்கள் காலில் போட்டு மிதித்து அதன் மதிப்புகளை நசுக்குபவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.

மதிப்புவாய்ந்த மக்களாட்சியை மதிக்காத அத்தகைய ஆணவம் மற்றும் எதேச்சதிகார ஆட்சியாளர்கள் மட்டும்தான் 50 ஆண்டுகளுக்கு நாட்டை ஆளுவோம் என்று கூற முடியும்.

ஆனால், ஜனநாயக முறையே இன்றி 50 ஆண்டுகள் தொடர்ந்து இந்தியாவை ஆள நினைக்கிறீர்கள். ஆனால், இந்தியா ஒன்றும் வடகொரியா அல்ல. அங்குதான் ஒரே ஒரு கட்சி பல பத்தாண்டுகளாக ஏக போக உரிமையோடு ஆண்டுகொண்டிருக்கிறது. இந்தியாவை வடகொரியா போல சர்வாதிகார ஆட்சிக்குள் கொண்டுவர நினைக்கும் உங்கள் கனவு பலிக்காது.

விழிப்புணர்வு மிக்க பத்திரிக்கையாளர்கள், விழிப்புணர்வு மிக்க அரசியல் கட்சிகள் மற்றும் மிக மிக விழிப்புணர்வு மிக்க பொதுமக்கள் ஆகியோர் நிறைந்துள்ள நாடு இந்தியா. இவர்கள் உங்களைப் பதவியிலிருந்து தூக்கியெறிவதற்கு நீண்ட காலம் பிடிக்காது.

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களுக்கு தேர்தலில் மக்கள் ஓட்டு போடுவார்கள் என்பது நிச்சயம் இல்லை. இந்நிலையில் பாஜகவினர் எதை எதையோ பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த 50 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சிதான் என்று அமித் ஷா எதன் அடிப்படையில் பேசுகிறார் என்று தெரியவில்லை. ஏனெனில், 2019 தேர்தலில் அவர்களுக்கான வாக்கு என்பதே இந்த ஆட்சியில் அவர்கள் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதின் அடிப்படையில்தான் எனும்போது, ஆணவமாகப் பேசினால் மட்டும் வெற்றி உறுதியாகிவிடுமா?

வரும் 2019-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் மீண்டும் ஆட்சியில் அமர்கிறது என்பதை அவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்.''

இவ்வாறு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜே வாலா பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x