

கேரளாவின் கோட்டயம் மாவட்ட ஆட்சியர் அஜித் குமார், அரசு ஒதுக்கி உள்ள தனது வீட்டிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள அலுவலகத்துக்கு வாரம் ஒருமுறை நடந்தே செல்கிறார்.
மேலும் 5 கி.மீ. சுற்றளவில் தங்கி உள்ள தனது அலுவலக அதிகாரிகளும் தங்களது வாகனங்களை விடுத்து அலுவலகத்துக்கு நடந்தே வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை 5 கி.மீ. தூரத்தை 30 நிமிடங்களில் நடந்து அலுவலகத்தை வந்தடைந்தார் அஜித் குமார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
பொதுமக்களிடம் குறிப்பாக இளைய தலைமுறையினரிடம் உடல் ரீதியிலான செயல்பாடுகள் குறைந்து வருகின்றன. இதனால் உடல்நலனுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். எனவே இதுகுறித்து நாம் சிந்திக்க வேண்டும்.
அந்த வகையில் வாரம் ஒரு நாள் அலுவலகத்துக்கு நடந்து வர முடிவு செய்துள்ளேன்.
அதிகாரிகளாகிய நாம் நடந்து வந்தால், பொதுமக்களும் இதைப் பின்பற்றத் தொடங்கி விடுவார்கள். இதனால் உடல்நலம் ஆரோக்கியமாக இருப்பதுடன் சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஓரளவு குறையும்.
ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்களின் குறைகளைக் கேட்டு வருகிறோம். இதனால், இந்த நாளில் அலுவலகத்துக்கு நடந்து வர முடிவு செய்துள்ளேன்.
இதனால் நடந்து வரும்போது சாதாரண மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளைக் கேட்டறிந்து அவற்றுக்கு தீர்வு காணவும் ஏதுவாக அமையும். பள்ளி, கல்லூரி மாணவர்களும் இந்த முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
ரத்த தானத்தை பிரபலப்படுத்தும் வகையில், மாவட்ட ஆட்சியர் அஜித் குமார் சமீபத்தில் 2 முறை ரத்த தானம் செய்துள்ளார்.