

தனக்கு 65 வயதாகிவிட்டால் கட்சியின் எந்தப் பொறுப்பையும் வகிக்க முடியாது என காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைமை கொறடா சத்யவர்த் சதுர்வேதி (64), அக்கட்சித் தலை வர் சோனியா காந்திக்கு புதன் கிழமை கடிதம் எழுதி உள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்திலி ருந்து மாநிலங்களவை உறுப் பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சதுர்வேதி இதுகுறித்து, ‘தி இந்து’விடம் கூறியதாவது:
65 வயதுக்குப் பிறகு கட்சியின் எந்த பொறுப்பையும் என்னால் வகிக்க முடியாது என்று கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதி இருந்தேன். அதை நினைவுபடுத் தும் வகையில் மீண்டும் இப்போது கடிதம் எழுதி உள்ளேன்.
கட்சித் தலைமை மீது எனக்கு எவ்வித அதிருப்தியும் இல்லை. எனது மாநிலங்களவை உறுப்பினர் பதவி 2018-ல் முடிவடைகிறது. அதன்பிறகு சாதாரண கட்சித் தொண்டனாக இருந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன் என அவர் தெரிவித்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய அமைப்பான ஆட்சி மன்றக் குழுவிலிருந்து அக்கட்சியின் மூத்த தலைவர்களான வாஜ்பாய், எல்.கே.அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் சமீபத்தில் வெளியேற்றப்பட்டனர். இவர்களுக்கென தனியாக மார்க தர்ஷன் மண்டல் என ஒரு குழுவை அக்கட்சி அமைத்துள்ளது.
பாஜகவின் இந்த நடவடிக்கையை வரவேற்கும் வகையில், காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான 68 வயது ஜனார்தன் துவிவேதி, “65 அல்லது 70 வயதான அரசியல் தலைவர்கள் முக்கியப் பொறுப்புகளிலிருந்து விலகி தங்களுக்கு பொருத்தமான பணிகளை செய்ய வேண்டும்” என கருத்து கூறியிருந்தார்.
இது வயதான தலைவர்களை அதிகம் கொண்ட காங்கிரஸ் கட்சியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து இப்போது சதுர்வேதி எழுதியுள்ள கடிதமும் சர்ச்சையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.