காங்கிரஸ் - தேசியவாத காங்.கூட்டணியும் முறிந்தது

காங்கிரஸ் - தேசியவாத காங்.கூட்டணியும் முறிந்தது
Updated on
1 min read

மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி முறிந்துவிட்டது. மேலும் காங்கிரஸ் அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் வாபஸ் பெறுவதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. அக்டோபர் 15-ம் தேதி நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு இரு கட்சிகளும் கடந்த ஒரு வாரமாக தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தின.

மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாதிக்குப் பாதி தொகுதிகளை தேசியவாத காங்கிரஸ் கோரியது. இதை ஏற்க மறுத்த காங்கிரஸ் 124 தொகுதிகளை ஒதுக்க முன்வந்தது. இழுபறி நீடித்த நிலையில் காங்கிரஸ் சார்பில் நேற்றுமுன்தினம் 118 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டது.

இதனால் அதிருப்தி அடைந்த தேசியவாத காங்கிரஸ், சட்டசபை தேர்தலில் தங்கள் கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம் என்றும் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இதைத் தொடர்ந்து கட்சியின் சட்டசபை தலைவர் அஜித் பவார், ஆளுநரை இன்று நேரில் சந்தித்து ஆதரவை வாபஸ் பெறுவது தொடர்பான கடிதத்தை அளிக்க உள்ளார்.

பாஜக- சிவசேனை கூட்டணி, காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி முறிந்துள்ளதால் மாநில சட்டசபை தேர்தலில் நான்கு முனை போட்டி உருவாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in